ஆவடி சுற்றுவட்டார பகுதிகளில் 2வது நாளாக இன்றும் கன மழை; சாலைகளில் மழைநீர் தேக்கம்; இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஆவடி: தமிழ்நாட்டில் இந்தாண்டு வடகிழக்கு பருவமழை வரலாறு காணாத வகையில் பெய்தது. அனைத்து மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வழிந்தன. இதனால் குடிநீர் பிரச்னை ஏற்படாது என்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று முன்தினம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை பெய்தது. குறிப்பாக, ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், அம்பத்தூர், பூந்தமல்லி, ஜமீன் கொரட்டூர் மற்றும் செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. ஆவடி பகுதியில் மட்டும் நேற்று முன்தினம் ஒரே நாளில் 23 செ.மீட்டர் மழை பதிவானது. பூந்தமல்லி, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 20 செ.மீட்டரும் ஜமீன் கொரட்டூர் 12 செ.மீட்டரும் செங்குன்றத்தில் 10 செ.மீட்டரும் மழை பதிவானது. இதன்காரணமாக முக்கிய நெடுஞ்சாலைகள், பிரதான சாலைகள், குறுகிய சாலைகளில் மழைநீர் ஆறாக ஓடியது. சில இடங்களில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. வீடுகளை சுற்றி மழைநீர் சூழ்ந்து நின்றது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குறிப்பாக ஆவடி- பூந்தமல்லி நெடுஞ்சாலை, புதிய ராணுவ சாலை, சி.டி.எச் சாலை ஆகியவற்றில் மழைநீர் ஆறாக ஓடியது. இதனால், வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், அம்பத்தூர், பூந்தமல்லி, செங்குன்றம் உள்ளிட்ட பல இடங்களில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. பிரதான சாலைகள், குறுக்கு தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் பாதசாரிகள் நடமாட முடியாமல் அவதிப்பட்டனர். வேலைக்கு சென்ற அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் சிரமப்பட்டு வீடு திரும்பினர். மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு தண்ணீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.இந்த நிலையில், நேற்று மதியம் மீண்டும் மழை வெளுத்து வாங்கியது. இன்று அதிகாலை வரை விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. ஆவடி பகுதியில் நேற்று ஒரே நாளில் 11 செ.மீ. மழை பதிவானது. மேற்கூறிய இடங்களில் மழைநீர் மீண்டும் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் தண்ணீரும் செல்ல முடியாமல் தேங்கியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மீண்டும் பாதிக்கப்பட்டது. சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘’சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில மணி நேர மழைக்கே சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தண்ணீர் செல்ல முடியாமல் பல இடங்களில் தேங்கி நிற்பதால் மக்கள் சிரமப்படுகின்றனர். இதனை தவிர்க்க வருங்காலங்களில் மழைநீர் தங்கு தடையின்றி செல்ல கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும்.  நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி செய்தால்தான் மழை பெய்தாலும், சென்னை, புறநகர் பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாது. எனவே, அரசு அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்….

The post ஆவடி சுற்றுவட்டார பகுதிகளில் 2வது நாளாக இன்றும் கன மழை; சாலைகளில் மழைநீர் தேக்கம்; இயல்பு வாழ்க்கை பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: