ஆளுநர், அரசியல் கட்சி தலைவர்கள் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து

சென்னை: ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு ஆளுநர், அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி:  தமிழகத்தில் உள்ள அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் உளம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழக மக்கள் புதிய நம்பிக்கையுடனும், மகிழ்ச்சியுடனும், செழிப்புடனும் வாழ வேண்டும். ஒருவருக்கு ஒருவர் நல்லிணக்கத்துடன் நல்ல உடல் நலத்துடன் வாழ வேண்டும். நமது தாய் நாடான இந்தியாவை எதிர்காலத்தில் மிக உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்:  இந்தியாவின் ஆளுமை, ஒன்றுபட்ட உணர்வு, உலகிற்கு தலைமை ஏற்கும் தகுதி ஆகியவற்றை உலகிற்கு பறைசாற்றும் ஆண்டாக 2021 அமைந்தது. கொரோனா பெருந்தொற்று இன்னும் முழுமையாக விலகாத நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விழாக்களையும் பண்டிகைகளையும் கொண்டாட வேண்டும். நாட்டு மக்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி: புலரும் புத்தாண்டில், ; பகைமை, வெறுப்பு உள்ளிட்ட தீய விஷயங்கள் அனைத்தும் ஒழிந்து; அன்பு, நட்பு உள்ளிட்ட நல்ல விஷயங்கள் இந்த மண்ணுலகில் பெருகட்டும் என்றும்; மக்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றியைப் பெற்றிடவும்; உலக மக்கள் அனைவரும் நோய் நொடியின்றி மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வாழ்ந்திடவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து, தமிழக மக்கள் அனைவருக்கும் உளங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறோம். கே.எஸ்.அழகிரி (தமிழக காங்கிரஸ் தலைவர்): ஒன்றிய பாஜ அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை காரணமாக தமிழகம் பல நிலைகளிலும் வஞ்சிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய அவலநிலைகளிலிருந்து தமிழகத்தை காப்பாற்ற எண்ணற்ற வெற்றிகளை குவித்து வருகிற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மிகப்பெரிய பொறுப்பும், கடமையும் இருக்கிறது. அதனை நிறைவேற்றுகிற வகையில் ஒருங்கிணைந்து ஓரணியில் திரண்டு 2024 பொதுத் தேர்தலில் ஒன்றிய பாஜ அரசை அகற்றுவதற்கு வருகிற புத்தாண்டு ஒரு தொடக்கமாக அமையட்டும். தமிழக மக்கள் அனைவருக்கும் மனப்பூர்வமான ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.ராமதாஸ் (பாமக நிறுவனர்): கடந்த இரு ஆண்டுகளில் நாம் அனுபவித்த விஷயங்கள் காரணமாக இந்த ஆண்டும் சோதனைகள் நிறைந்த ஆண்டாகவே இருக்கும் என்ற எண்ணம் பொதுவாக மக்களிடம் நிலவுகிறது. 2022ம் ஆண்டு இனிப்பாக அமையும். அனைவருக்கும் அனைத்து நலன்களும், வளங்களும் கிடைக்கும்; அமைதியும், நிம்மதியும் கிடைக்கும்; அவற்றை சாதிக்க நாம் கடுமையாக உழைப்போம். வைகோ (மதிமுக பொது செயலாளர்): 2021ம் ஆண்டு அரசியலில் தமிழர்களுக்கு வசந்தத்தின் வெளிச்சம் பிரகாசித்த ஆண்டாகும். கொரோனா, ஒமிக்ரான் உள்ளிட்ட நோய்களின் பிடியிலிருந்து மக்கள் முழுமையாக விடுபட்டு, ஆரோக்கியம் பெறவும் தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் வெற்றி பெறட்டும். கி.வீரமணி (திராவிடர் கழக தலைவர்): நகரும் ஆண்டில் நலிவுகள் ஏராளம். வரும் புத்தாண்டை வலியில்லா வளமை தரும் புத்தாண்டாக ஆக்க  பகுத்தறிவால் பயணிப்போம். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்): சாதிய, சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக, சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை மக்களின் நலன்களை பாதுகாத்திட, மக்கள் ஒற்றுமை பேணுவதிலும், பாலின ஒடுக்குமுறையற்ற சமூக, சமத்துவ சமுதாயத்தை படைப்பதிலும் தமிழக மக்கள் உறுதியுடன் செயலாற்ற முன்வர வேண்டுமென புத்தாண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறைகூவி அழைக்கிறது. ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்): சகோதரத்துவமும், அன்பும், நட்பும் பெருகி நாட்டு மக்களும், நாடும் வளம் பெற வேண்டும். வாழ்வில் வளம் பெற்று, நலமுடன் வாழ தமாகா சார்பில் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அன்புமணி (பாமக இளைஞர் அணி தலைவர்):தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து நலன்களும், வளங்களும், ஆனந்தம், வளர்ச்சி, அமைதி, நல்லிணக்கம், சகோதரத்துவம் உள்ளிட்ட அனைத்தும் கிடைக்க வேண்டும். டி.டி.வி.தினகரன் (அமமுக பொது செயலாளர்): மனிதநேயம் தழைத்திட, எல்லாரும் எல்லாமும் பெற்றிட இல்லாமை இல்லாத நிலை உருவாகிட 2022 புத்தாண்டில் வழி பிறக்கட்டும். ஆரோக்கியத்துடனும் மனநிம்மதியுடனும் ஒவ்வொருவரும் வாழ்ந்திட புத்தாண்டில் இறையருளை வேண்டுகிறேன். விஜயகாந்த் (தேமுதிக தலைவர்): புத்தாண்டில் ஏழை, எளிய மக்களின் துன்பங்கள் நீங்கி, மகிழ்ச்சியும், ஏற்றமிகு வாழ்வும், நம்பிக்கையும், வளர்ச்சியும், எழுச்சியும் ஏற்பட வேண்டும். சமதர்ம சமுதாயம் அமைந்திடவும், மனித நேயம் மலர்ந்திட வேண்டும். இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்):ஜனநாயக சக்திகள் மேலும் வலிமை பெற்று நாட்டின் அதிகாரத்தில் நீடிக்கும் வகுப்புவாத மத வெறி சக்திகளையும், ஜாதி ஆதிக்க வெறித்தனத்தையும் முறியடித்து நீடித்த அமைதிக்கு வழிகாணும் என்ற நம்பிக்கையோடு அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.காருண்யா நிகர்நிலைப் பல்கலைக்கழக வேந்தர் பால் தினகரன்:  வாழ்வை ஆரோக்கியத்தால் நிலை நிறுத்தும் ஆண்டாகவும், மொத்தத்தில் பழையன ஒழிய, எல்லாவற்றையும் புதிதாய் மாற்றும் புத்தாண்டு மலரவும் இதயப்பூர்வமாய் விரும்பி வாழ்த்துகிறேன்.இதேபோல, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், சமக தலைவர் சரத்குமார், புதிய நீதிக்கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார், இந்திய ஹஜ் அசோஷியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கர், தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, சமத்துவம் மக்கள் கழகம் தலைவர் எர்ணாவூர் நாராயணன், கோகுல மக்கள் கட்சி நிறுவன தலைவர் எம்.வி.சேகர், தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் (குலாலர்) சங்க மாநில தலைவர் சேம.நாராயணன் உள்ளிட்ட தலைவர்களும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்….

The post ஆளுநர், அரசியல் கட்சி தலைவர்கள் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: