குறும்புத்தனம் செய்த சிறுவன் கழுத்தை நெரித்து கொலை: கொடூர தந்தை கைது

சென்னை: கும்மிடிப்பூண்டி அடுத்த சின்னச்சோழியம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் முத்து(42). இவருடைய மகன் கார்த்திக்(11). அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 5ம் வகுப்பு படித்தான். கடந்த 3ம் தேதி காயங்களுடன் சிறுவனை பெற்றோர்கள் கோட்டக்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், கார்த்திக் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்நிலையில், கார்த்திக்கின் தாய் நீலா(34) கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் மகன் சாவில் தனக்கு சந்தேகம் இருப்பதாக புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று கார்த்திக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில், அவன் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதனால், சிறுவனின் தந்தை முத்து மீது சந்தேகமடைந்த போலீசார் அவரை பிடித்து நடத்திய விசாரணையில், கார்த்திக் அதிகமாக குறும்புத்தனம் செய்வது வழக்கம். இது முத்துவிற்கு பிடிக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த முத்து தனது மகனை சரமாரி தாக்கி செல்போன் சார்ஜர் வயரால் கழுத்தை இறுக்கி கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். குறும்புத்தனம் செய்ததற்காக பெற்ற மகனையே தந்தை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: