மதுரை, ஜூலை 19: வைகை ஆற்றில் செல்லும் தண்ணீரை ஆங்காங்கே தேக்கி வைத்து மதுரை மாநகராட்சி பகுதியில் நிலத்தடி நீராதாரத்தை பெருக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக மாநகரில் ஆரப்பாளையம், கல்பாலம் மற்றும் ஓபுளா படித்துறை ஆகிய இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. இதில், ஆரப்பாளையத்தில் ரூ.11.90 கோடியில் கட்டப்பட்ட தடுப்பணையில், இரண்டு ஷட்டர்கள் பொருத்தப்பட்டிருந்தன.
முல்லைப் பெரியாறு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய் பதிப்பது உள்ளிட்ட பணிகளுக்காக இந்த ஷட்டர்கள் அகற்றப்பட்டன. சமீபத்தில் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் முடிவுக்கு வந்ததன. இருப்பினும் ஆரப்பாளையம் தடுப்பணையில், மீண்டும் ஷட்டர்கள் பொருத்தப்படாமல் இருந்தன.
இதனால் சில தினங்களுக்கு முன் ராமநாதபுரம் மாவட்ட வைகை அணையில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டபோது, தடுப்பணையில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாமல் போனது. இதையடுத்து, ரூ.65 லட்சத்தில் இரண்டு ஷட்டர்கள் பொருத்துவதற்காக மறு ஒப்பந்தம் விடும் பணிகள் துவங்கி உள்ளன. இதனால், விரைவில் ஷட்டர்கள் பொருத்தப்படும் என, நீர்வளத்துறையின் மதுரை கோட்ட கண்காணிப்பு பொறியாளர் சாம்இர்வின் தெரிவித்துள்ளார்.
The post ஆரப்பாளையம் தடுப்பணையில் ரூ.65 லட்சத்தில் ஷட்டர்கள் appeared first on Dinakaran.
