ஆப்கானிஸ்தானில் இருக்கும் இந்தியர்களை மீட்க மத்திய பாஜக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

டெல்லி: ஆப்கானிஸ்தானில் இருக்கும் இந்தியர்களை மீட்க மத்திய பா.ஜ.க அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா வலியுறுத்தியுள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியானதை அடுத்து, தலிபான்கள் பெரும்பான்மையான மாகாணங்களை கைப்பற்றினர். தலைநகர் காபூலையும் கைப்பற்றி உள்ளனர். இதனால், அந்நாட்டு அதிபர்  பதவியை ராஜினாமா செய்த அஷ்ரப் கனி, தஜிகிஸ்தானுக்கு தப்பியோடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆட்சி அதிகாரம் அவர்கள் வசம் செல்வதால் அங்குள்ள இந்தியர்கள் மற்றும் இந்திய தூதரகங்களில் பணியாற்றும் ஊழியர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.முன்னதாக, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தூதரக ஊழியர்களை வெளியேற்றும் பணி தொடங்கி நடந்து வருகிறது. காபூலில் இருந்து இந்தியர்களையும், இந்திய தூதரக ஊழியர்களையும் அவசரமாக அழைத்து வருவதற்காக இந்திய விமானப்படையின் சி-17 குளோப்மாஸ்டர் ராணுவ சரக்கு விமானம் தயார்நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், காபூலில் சிக்கித் தவித்த 129 இந்தியர்களை  மீட்டு வருவதற்காக, ‘ஏர் இந்தியா போயிங் 777’ என்ற விமானம் நேற்று டெல்லியில் இருந்து புறப்பட்டது. 28,000 அடி உயரத்தில் பறந்த இந்த விமானம்  காபூல் விமான நிலையத்தின் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு நிலையத்தில்  (ஏடிசி) தரையிறங்க அனுமதிக்கப்படவில்லை. காரணம், ஏற்கனவே அங்கொரு விமானம்  ஓடுபாதையில் ஆபத்தான நிலையில் இருந்தது. அதனால் இந்திய விமானம் உடனடியாக  ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமான நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதனால்,  உரிய நேரத்தில் இந்தியர்களை அழைத்து வரமுடியாத சூழல் ஏற்பட்டது. இதற்கிடையே மற்றொரு ஏர் இந்தியா விமானம் மூலம் நேற்று இரவு 129 இந்தியர்களும் டெல்லிஅழைத்து வரப்பட்டனர். எல்லாவற்றிற்கும் மேலாக, ஆப்கானிஸ்தானில் நடக்கும் விசயங்களை இந்திய அரசு உன்னிப்பாகக்  கவனித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் இருக்கும் இந்தியர்களை மீட்க மத்திய பாஜக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா வலியுறுத்தியுள்ளார். ஆப்கானிஸ்தானில் நிலைமை மிகவும் மோசமாகி விட்டது. அங்குள்ள இந்திய தூதரகம், இந்திய குடிமக்கள் போன்றவர்களின் பாதுகாப்பு ஆபத்தில் இருக்கிறது. காங்கிரஸ் கட்சி இந்தியாவின் நலன்களை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது. இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மவுனம் காப்பது அதிர்ச்சியளிக்கிறது. எனவே ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை மீட்பதை பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கம் கைவிடுவது முற்றிலும் ஏற்றுக் கொள்ளமுடியாது என்றும் பிரதமரும், வெளியுறுவுத்துறை அமைச்சரும் அங்குள்ள இந்தியர்களை மீட்பதற்கான தெளிவான திட்டத்தை தெரிவிக்குமாறும் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா வலியுறுத்தியுள்ளார்….

The post ஆப்கானிஸ்தானில் இருக்கும் இந்தியர்களை மீட்க மத்திய பாஜக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: