ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால் வாறுகால் அமைக்கும் பணிகள் பாதிப்பு: எம்எல்ஏவிடம் ஊராட்சி தலைவர் மனு

 

சிவகாசி, ஜூன் 15: பள்ளபட்டி ஊராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால் வாறுகால் அமைக்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அசோகன் எம்எல்ஏவிடம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜபாண்டியன் மனு கொடுத்தார்.சிவகாசி அருகே பள்ளப்பட்டி ஊராட்சியில் காமராஜர்புரம் காலனியில் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல போதிய வாறுகால் வசதிகள் இல்லை. இதனால் சாலைகளில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.

இதனால் சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த நிலையில் வாறுகால் வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜபாண்டியனிடம் கோரிக்கை வைத்தனர். அதனை தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் காமராஜர்புரம் காலனிக்கு வந்து வாறுகால் அமைக்க தேவையான பணிகளை தொடங்க அனுமதி அளித்தனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டு வாறுகால் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து பள்ளபட்டி ஊராட்சி நிர்வாகம் சார்பில் தாலுகா அலுவலகத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சர்வே பிரிவு அதிகாரிகள் சம்மந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து உரிய அறிக்கை தர தாமதம் ஏற்பட்டதாலும் நீதிமன்றத்தில் வழக்கு இருந்ததாலும் காமராஜர்புரம் காலனியில் வாறுகால் அமைக்கும் பணிகள் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது சர்வே பணிகள் முடிந்த நிலையிலும் நீதிமன்ற வழக்கு முடிந்த நிலையிலும் பணிகளை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் வாறுகால் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி வாறுகால் அமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவகாசி எம்எல்ஏ அசோகனிடம் பள்ளபட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜபாண்டியன் மனு கொடுத்தார். அந்த மனு குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக எம்எல்ஏ அசோகன் தெரிவித்துள்ளார்.

 

The post ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால் வாறுகால் அமைக்கும் பணிகள் பாதிப்பு: எம்எல்ஏவிடம் ஊராட்சி தலைவர் மனு appeared first on Dinakaran.

Related Stories: