உலகம் முழுவதும் கடும் எதிர்ப்பு ; 8.7 கோடி பேஸ்புக் தகவல்களை திருடிய கேம்பிரிட்ஜ் அனலிடிகா மூடப்படுகிறது

லண்டன்: உலகம் முழுவதும் 8.7 கோடி பேரின் பேஸ்புக் தகவல்களை திருடிய கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இங்கிலாந்தை சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிடிகா என்ற நிறுவனம் பேஸ்புக் நிறுவனத்துடன் இணைந்து, உலகம் முழுவதும் பல கோடி மக்களின் தகவல்களை பேஸ்புக்கில் இருந்து திருடி பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. குறிப்பாக, பல நாடுகளில் நடக்கும் தேர்தல் முடிவுகளை மாற்றவும், ஓட்டு போடும் வாக்காளர்களின் மனநிலையில் மாற்றம் ஏற்படுத்தவும் கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் இந்த மோசடிகளை செய்துள்ளது.

இந்தியாவில் 2010 முதல் நடந்த பல்வேறு தேர்தல்களில் முடிவுகளை நிர்ணயிக்கும் பணியை இந்த நிறுவனம் செய்து வந்துள்ளது. குறிப்பாக பாஜ.வுக்கு ஆதரவாக நடந்து கொண்டதாக அந்த நிறுவனம் தெரிவித்து. இதே போல் 2016 நவம்பரில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலிலும் கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் தலையிட்டது தெரிய வந்துள்ளது. இதனால்தான் டிரம்ப் அமோக வெற்றி பெற்றதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.இதையடுத்து பல்வேறு நாடுகள் பேஸ்புக் நிறுவனத்திற்கும், கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்திற்கும் கடும் எதிர்ப்பை தெரிவித்தன. இதையடுத்து இரண்டு நிறுவனங்களும் மன்னிப்பு கேட்டுக்கொண்டன. இந்த நிலையில் கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் சுமார் 8.70 கோடி பேரின் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2019 நடைபெற உள்ள இந்திய நாடாளுமன்ற தேர்தலிலும் கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் தலையிடப்போவதாக தகவல் வெளியானது. குறிப்பாக காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக இந்த நிறுவனம் செயல்படப்போவதாக வெளியான தகவலை அறிந்து மத்திய அரசு கடும் எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில், கேம்பிரிட்ஜ் அனலிடிகா தனது செயல்பாட்டை நிறுத்திக்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் அந்நிறுவனம் திவாலானதாக அறிவிக்கக் கோரிய மனு தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது. இதுதொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது:வாடிக்கையாளர்கள் எழுப்பிய சர்ச்சையை தொடர்ந்து கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் உடனடியாக மூடப்படுகிறது. சுமார் இரண்டு மாதங்களுக்குள் இந்த முடிவை எடுத்துள்ளோம். ஆனால் நாங்கள் எந்தவித தவறையும் செய்யவில்லை. தவறாக செய்திகள் பரப்பப்பட்டு விட்டன. எங்கள் பணியை எங்கள் ஊழியர்கள் முறையாகவும், சட்டப்படியும் செய்தனர் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். முறைகேடான பிரசாரத்தால் எங்கள் வாடிக்கையாளர்களை இழந்து விட்டோம். எனவே தொடர்ந்து நிறுவனத்தை இயக்க எங்களால் முடியவில்லை.  மேலும் எங்கள் நிறுவனம் திவாலானதாக அறிவிக்க நோட்டீஸ் வழங்கியிருக்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவன ஊழியர்கள் அனைவரது அடையாள அட்டையும் திரும்ப பெறப்பட்டுள்ளன.

விசாரணைக்கு பயந்து மூடியதா?

கேம்பிரிட்ஜ் அனலிடிகா மற்றும் அதன் மூத்த நிறுவனமான எஸ்சிஎல் எலக்சன் நிறுவனமும் மூடப்பட்டுள்ளன. இரண்டு நிறுவனங்களும் திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் அமெரிக்கா, இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் இந்த நிறுவனங்களின் இயக்கம் பாதிக்கப்படும். இதுபற்றி இங்கிலாந்து நாடாளுமன்ற குழு தலைவரின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதே போல் பேஸ்புக் நிறுவனம் உத்தரவிட்டுள்ள விசாரணையும் தொடர்ந்து நடைபெறும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘தகவல் திருட்டு தொடர்பான விசாரணைக்கு பயந்து போய் தான் கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் மூடப்பட்டுள்ளது. இருந்தாலும் எங்கள் விசாரணை தொடர்ந்து நடைபெறும்’’

Related Stories: