அரிமளம், திருமயம் பகுதியில் போதை பொருட்கள் வைத்திருந்த முதியவர் உள்பட 4 பேர் கைது

 

திருமயம்: அரிமளம், திருமயம் பகுதியில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கஞ்சா, ஹான்ஸ் உள்ளிட்ட போதைப் பொருள்கள் வைத்திருந்ததாக ஒரு முதியவர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம், திருமயம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் சிறப்பு காவல் படை குழுவினர் தடை செய்யப்பட்ட கஞ்சா, ஹான்ஸ் உள்ளிட்ட போதைப் பொருட்கள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். இதன் அடிப்படையில் நேற்று திருமயம் அருகே உள்ள வீராணம்பட்டி பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராங்கியம் அம்மன் நகரை சேர்ந்த நாடி முத்து மகன் மனோஜ் (22) என்பவர் கஞ்சா வைத்திருந்ததாக போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் பைக், ஒரு மொபைல் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்ததோடு பனையப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக பனையப்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் ஏம்பல் பகுதியில் உள்ள மதகம் கிராமத்தில் வேளாணியைச் சேர்ந்த குமார்(44), இருமநாடைச் சேர்ந்த ஐயாசாமி (77) ஆகியோருக்கு சொந்தமான பெட்டிக்கடைகளில் சிறப்பு போலீசார் நடத்திய சோதனையில் அரசு தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருள்களை பறிமுதல் செய்தனர். இவர்கள் மீது ஏம்பல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் அரிமளம் அருகே கே புதுப்பட்டி கடைவீதியில் பால் கடை நடத்தி வரும் கொங்கன் தெருவை சேர்ந்த பாண்டியன்(47) என்பவர் ஹான்ஸ் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருள் வைத்திருந்ததாக கே புதுப்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலே குறிப்பிட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post அரிமளம், திருமயம் பகுதியில் போதை பொருட்கள் வைத்திருந்த முதியவர் உள்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: