அரசு பஸ் கார் நேருக்கு நேர் மோதல் மின் ஊழியர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் வந்தவாசி அருகே விபத்து

வந்தவாசி, டிச. 9: வந்தவாசி அடுத்த ஏரிப்பட்டு கூட்டுச்சாலை அருகே அரசு பஸ் கார் நேருக்கு நேர் மோதியதில் மின் ஊழியர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். வந்தவாசி டவுன் திண்டிவனம் சாலையில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனைக்கு சொந்தமான பஸ் நேற்று தாம்பரத்தில் இருந்து மேல்மருவத்தூர் அச்சரப்பாக்கம் சத்தியவாடி, தெய்யார் மடம், திரேசாபுரம், தெள்ளார் வழியாக வந்தவாசி நோக்கி வந்தது. வந்தவாசி திண்டிவனம் நெடுஞ்சாலை ஏரிப்பட்டு கூட்டுச்சாலை அருகே வந்தபோது பஸ்சை வந்தவாசி சூரிய குப்பம் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார்(43) ஓட்டி வந்தார். பஸ் இடது புறமாக வந்து கொண்டு இருந்தது. அப்போது எதிரே வந்த கார் அதிவேகமாக இடதுபுறத்துக்கு பதிலாக வலது புறம் நோக்கி வந்ததால் செய்வது அறியாமல் திகைத்த பஸ் டிரைவர் விஜயகுமார் பஸ்சை இடது புறமாக நிறுத்தினார். அப்போது அதிவேகமாக வந்த கார் நேருக்கு நேர் மோதியது. இதில் காரில் பலூன் வசதி இருந்ததால் கார் மோதியதும் பலூன் விரிந்தது. இதில் சிக்கிய கார் ஓட்டி வந்த நபரை பஸ்ஸில் வந்தவர்கள் மீட்டனர். பின்னர் விசாரணை செய்ததில் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த தேவராஜ்(45) என்பதும் இவர் திண்டிவனம் மின் நிலையத்தில் பண்டக கண்காணிப்பாளராக வேலை செய்து வருவது தெரிந்தது. மின்துறை அலுவலகத்துக்காக செல்ல காரை தானே இயக்கி வந்து விபத்து ஏற்படுத்தியது தெரியவந்தது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த விதமான காயமும் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக மின் ஊழியர் உயிர்த்தப்பினர். இதுகுறித்து பொன்னூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தணிகைவேல் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். போக்குவரத்து தடை ஏற்படாத வகையில் நேருக்கு நேர் மோதிய அரசு பஸ் காரை அப்புறப்படுத்தினர்.

The post அரசு பஸ் கார் நேருக்கு நேர் மோதல் மின் ஊழியர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் வந்தவாசி அருகே விபத்து appeared first on Dinakaran.

Related Stories: