அதிமுக பொதுச்செயலாளராக உரிமை கோர சசிகலாவுக்கு அடிப்படை உரிமை இல்லை: சிவில் கோர்ட்டில் ஓ.பி.எஸ், ஈபிஎஸ் தரப்பு வாதம்

சென்னை:  சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, 2017ம் ஆண்டு அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியிலிருந்தும், டி.டி.வி.தினகரனை துணைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்தும் நீக்கம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து,  பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என்று அறிவிக்கக்கோரி சசிகலா தரப்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தன்னை பொதுச்செயலாளராக அறிவித்து 2016 டிசம்பர் 29ம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஓபிஎஸ், எடப்பாடி உள்ளிட்டோரை கட்டுப்படுத்தும் என்று அறிவிக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியது சட்டவிரோதம் என்று அறிவிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர்  எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.  இந்த மனு சென்னை 4வது கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கிருஷ்ணன், எடப்பாடி தரப்பில்  எஸ்.ஆர்.ராஜகோபால் ஆஜராகினர். வழக்கை தாக்கல் செய்ய சசிகலாவுக்கு எந்த உரிமையும் இல்லை. ஏற்கனவே கட்சி உரிமை கோரிய வழக்கில் மதுசூதனன் தலைமையிலான அணியே அதிமுக என்று அறிவித்து தேர்தல் ஆணையமும், டெல்லி உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக உரிமை கோர சசிகலாவுக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை. கட்சியும், சின்னமும் தங்களிடம் தான் உள்ளது. சசிகலா தொடர்ந்த இந்த வழக்கு, விசாரணைக்கு உகந்ததல்ல என்பதால் அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டனர்.   வழக்கில் வாதம் முடிவடையாததால் வழக்கு விசாரணை அக்டோபர் 27க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது….

The post அதிமுக பொதுச்செயலாளராக உரிமை கோர சசிகலாவுக்கு அடிப்படை உரிமை இல்லை: சிவில் கோர்ட்டில் ஓ.பி.எஸ், ஈபிஎஸ் தரப்பு வாதம் appeared first on Dinakaran.

Related Stories: