×

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் கடல் முற்றுகை: வளைகுடா பகுதியில் போர் பதற்றம்!

ஹார்முஸ் கடல்வழி முடக்கத்தை அமெரிக்கா மீண்டும் நீட்டித்ததால் இருநாட்டு ஒப்பந்தம் சீர்குலைந்துவிட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, இரு நாட்டுப் படைகளும் மீண்டும் பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்டதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ஏற்பட்ட தற்காலிக அமைதி ஒப்பந்தம் முற்றிலும் முறிவடைந்துள்ளது.

உலகில் ஐந்தில் ஒரு பங்கு கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கொண்டு செல்லப்படும் ‘ஹார்முஸ் நீரிணை’ (Strait of Hormuz) கடல் வழியைக் கட்டுப்படுத்த இரு நாடுகளும் மோதி வருகின்றன. இந்த வழியே சென்ற கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால், ஈரானின் துறைமுகங்களை அமெரிக்க ராணுவம் மீண்டும் முற்றுகையிட்டுள்ளது.

இதற்குப் பதிலடியாக, அமெரிக்கப் படைகள் தங்கியிருக்கும் அண்டை நாடுகள் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது. பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் ஏவுகணை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா ஒப்பந்தத்தை மீறிவிட்டதாகக் கூறி, அமைதி உடன்படிக்கையிலிருந்து ஈரான் அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளது. மேலும், “எவ்வளவு இழப்பு ஏற்பட்டாலும் இந்த கடல் வழி முழுவதையும் ஈரானே கட்டுப்படுத்தும்; அமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தை கிடையாது” என்றும் ஈரான் அறிவித்துள்ளது.

இந்த மோதலால் உலகளவில் கச்சா எண்ணெய் மற்றும் உரங்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா தற்போது 19 போர்க்கப்பல்களையும், நூற்றுக்கணக்கான போர் விமானங்களையும் அந்தப் பகுதியில் நிறுத்தியுள்ளது. இதனால் வளைகுடா பகுதியில் மீண்டும் ஒரு முழு அளவிலான போர் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

Tags : US ,Iran ,Gulf ,United States ,Hormuz ,freeze ,
× RELATED பெட்ரோலில் எத்தனால் கலக்கும் திட்ட...