புதுடெல்லி: பெட்ரோலில் எத்தனால் கலக்கும் திட்டத்தின் மூலம் தமது குடும்பத்தினர் ஆதாயம் அடைவதாக எதிர்க்கட்சிகள் கூறும் புகார்களை ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி திட்டவட்டமாக மறுத்துள்ளார். இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தவும், கச்சா எண்ணெய் இறக்குமதி செலவைக் குறைக்கவும் ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்ட பெட்ரோலில் எத்தனால் கலக்கும் திட்டத்தின் கீழ், கரும்புச் சாறு, சோளம் மற்றும் பிற தானியக் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் புதுப்பிக்கத்தக்க உயிரி எரிபொருளான எத்தனால், பெட்ரோலுடன் கலக்கப்பட்டு வாகனங்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.
அரசு நிர்ணயித்த இலக்கின்படி, தற்போது நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளில் 20 சதவீத எத்தனால் கலக்கப்பட்ட ‘இ-20 பெட்ரோல்’ முதன்மை எரிபொருளாக விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த திட்டம் குறித்து புதிய சர்ச்சை கிளம்பி உள்ளது. அதாவது, ‘இ-20 எத்தனால் கலப்பு பெட்ரோலால் வாகனங்களின் இன்ஜின் பழுதடையாது’ என்று ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியதால், பல்வேறு தரப்பினரும் அமைச்சருக்கு எதிராக கண்டனங்களையும், அவதூறுகளையும் பரப்பி வருகின்றனர். அமைச்சருக்கு எதிராக அவதூறுகளை பரப்பியதாக மகாராஷ்டிரா அரசு 4 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது.
இந்நிலையில்ல அமைச்சர் நிதின் கட்கரி அளித்த பேட்டியில், ‘பெட்ரோலில் எத்தனால் கலக்கும் திட்டம் என்பது திடீரென கொண்டு வரப்பட்டது அல்ல; வாஜ்பாய் தலைமையிலான ஆட்சிக் காலத்திலேயே தொடங்கப்பட்டு, பின்னர் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிலும் தொடரப்பட்டது. பல ஆண்டுகளாக இயங்கி வரும் எங்களது குடும்பத்தின் சர்க்கரை ஆலையை தனது மகன்களே நடத்தி வருவதாகவும், அந்தத் தொழிலுக்கு 1,600 கோடி ரூபாய் கடன் இருப்பதாகவும், அதற்கும் எமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
ஆனால் எமது குடும்பத்தினர் இந்தத் திட்டத்தின் மூலம் பெரும் லாபம் ஈட்டுவதாக எதிர்கட்சிகளால் சமூக வலைதளங்களில் திட்டமிட்டு பரப்பப்படும் குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை. எனது மகன்கள் நடத்தும் தொழிற்சாலையின் பங்களிப்பு என்பது நாட்டின் மொத்த எத்தனால் உற்பத்தியில் வெறும் 0.5 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. அவர்களது மொத்தத் தொழிலில் எத்தனால் என்பது வெறும் 10 சதவீதம் மட்டுமே. இ-20 ரக எரிபொருளைப் பயன்படுத்துவதால் வாகனங்களின் இன்ஜின் பாதிக்கப்படும் என்று நான் கூறவில்லை. இ-10 தரத்தில் உள்ள அனைத்து வாகனங்களிலும் இ-20 எரிபொருளை எவ்வித இன்ஜின் பாதிப்பும் இன்றி பயன்படுத்த முடியும் என மாருதி சுசூகி போன்ற முன்னணி நிறுவனங்களே சான்றளித்துள்ளன.
நகர்ப்புற போக்குவரத்தில் இதனால் பெரிய அளவில் மைலேஜ் குறையாது; அதிவேக நெடுஞ்சாலைகளில் மட்டுமே மிகக் குறைந்த அளவில் மைலேஜ் குறைய வாய்ப்புள்ளது. மாற்று எரிபொருள் பிடிக்காதவர்கள் கூடுதல் விலை கொடுத்து 100 சதவீதம் பெட்ரோலை தாராளமாக வாங்கிக் கொள்ளலாம். வாகனப் புகையினால் 40 சதவீதம் காற்று மாசுபாடு ஏற்படும் டெல்லி போன்ற நகரங்களில் மாசுபாட்டைக் குறைக்கவும், நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதிச் செலவை மிச்சப்படுத்தவும் மாற்று எரிபொருட்களை ஊக்குவிப்பது அவசியமானது.
கரும்பு மட்டுமின்றி மக்காச்சோளம், அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் பிரச்னையாக உள்ள வைக்கோல் கழிவுகள், அசாம் மாநில மூங்கில்கள் ஆகியவற்றில் இருந்தும் எத்தனால் தயாரிப்பதை ஆதரிக்கிறேன். அத்துடன் மெத்தனால், ஹைட்ரஜன் மற்றும் மின்சார வாகனங்கள் போன்றவற்றையும் அரசு தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது’ என்று கூறினார்.
