நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே இன்று காலை குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த யானை கூட்டத்தை வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டினர். அப்போது யானைகள் தனித்தனியாக பிரிந்து சென்றதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே கடையால்மூடு பேரூராட்சிக்கு உள்பட்ட மருதம்பாறை பகுதியில் ரப்பர் தோட்டங்கள், 200க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன. இதற்கிடையே இன்று காலை சுமார் 6.30 மணிக்கு யானைகள் கூட்டமாக ரப்பர் தோட்டத்தில் உலாவிக் கொண்டு இருந்தன.
இதை அந்த பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் பாஹின் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். இதையடுத்து வனசரகர் முகைதீன் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் பட்டாசுகள் வெடித்து யானை கூட்டத்தை காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது யானைகள் திசைக்கொன்றாக தனித்தனியாக பிரிந்து சென்றன.
இதனால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.
