நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே வாலிபர்களை சரமாரி தாக்கிய 2 போலீஸ் ஏட்டுகள் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர். நாகர்கோவில் அருகே உள்ள கீழகாட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் வினேஷ் (40). இவரது மனைவி நதியா (39). இவரது சகோதரர் நிக்கோம் (32). சென்னையில் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன், இவர் கீழகாட்டுவிளைக்கு வந்திருந்தார். நேற்று முன் தினம் நிக்கோம், கீழக்காட்டுவிளை சந்திப்பில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த கஞ்சா தடுப்பு சிறப்பு பிரிவு போலீஸ் ஏட்டு ஆட்லின் அருள் (46) என்பவர் அங்கு வந்துள்ளார். அவர் நிக்கோமிடம் ஏன் இங்கு நிற்கிறாய் என கேட்டுள்ளார். அப்போது நிக்கோம், பைக்கில் பெட்ரோல் தீர்ந்து விட்டது என கூறி உள்ளார்.
அப்போது நிக்கோமை, ஏட்டு ஆட்லின் அருள் ஆபாசமாக பேசி திட்டி உள்ளார். இது குறித்து அறிந்ததும் வினேஷ், அங்கு வந்து மைத்துனை ஏன் திட்டுகிறீர்கள். அவன் குற்றவாளியா? பைக்கில் பெட்ேரால் தீர்ந்து விட்டதால் நிற்பது குற்றமா? என கேட்டுள்ளார். அப்போது ஆத்திரம் அடைந்த ஏட்டு ஆட்லின் அருள் மற்றும் அவருடன் வந்திருந்த தனிப்படை போலீசார் சிலர் சேர்ந்து வினேசை தாக்கி உள்ளனர். இதை தடுக்க முயன்ற நிக்கோமையும் தாக்கி இருக்கிறார்கள். பின்னர் சுசீந்திரம் காவல் நிலையத்துக்கு வாகனத்தில் கொண்டு சென்றனர். அப்போதும் இருவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. நான் ஏன் காவல் நிலையத்துக்குள் வர வேண்டும் என கேட்ட வினேசை தர, தரவென இழுத்து காவல் நிலையத்துக்குள் கொண்டு சென்றனர்.
இந்த தாக்குதலில் ரத்த வாந்தி எடுத்து, வினேஷ் மயங்கி உள்ளார். பின்னர் 108 ஆம்புலன்சு காவல் நிலையத்துக்கு வந்து வினேசை, மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். காயமடைந்த நிக்கோமும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது பற்றி அறிந்ததும் வினேஷ் மனைவி நதியா மற்றும் உறவினர்கள் காவல் நிலையத்தில் திரண்டனர். தனது கணவரை தேவையின்றி அடித்து காயப்படுத்தியது ஏன்? என கேட்டு காவல் நிலையத்துக்கு வந்து கதறி அழுதார். அப்போது அங்கிருந்த தனிப்படை போலீசாரை அவரையும் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட எஸ்.பி. ஸ்டாலினுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் இது தொடர்பாக விசாரணை நடத்த கன்னியாகுமரி டி.எஸ்.பி. ெஜயச்சந்திரனுக்கு உத்தரவிட்டார். இதன் பேரில் காவல் நிலையத்துக்கு வந்து நடந்த சம்பவங்கள் குறித்தும், பாதிக்கப்பட்டவர்களிடமும் டி.எஸ்.பி. விசாரித்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு ஏட்டு ஆட்லின் அருள் மற்றும் ஏட்டு சுபாஷ் ஆகிய இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் ெதாடர்பாக மேல் விசாரணை நடந்து வருகிறது.
தனித்தனி வழக்கு பதிவு
இந்த சம்பவம் தொடர்பாக தற்போது சுசீந்திரம் காவல் நிலையத்தில் இரு வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. காயம் அடைந்த வினேஷ் அளித்த புகாரின் பேரில் போலீஸ் ஏட்டு ஆட்லின் அருள் மற்றும் ஏட்டு சுபாஷ் ஆகிய 2 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் வினேஷ் மற்றும் அவரது மைத்துனர் நிக்கோம் ஆகிய 2 பேரையும் அடித்து காயப்படுத்தி வினேஷ் கழுத்தில் கிடந்த இரண்டரை பவுன் செயினையும் எடுத்துக் கொண்டதாக அளித்த புகாரின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதே போல் ஏட்டு ஆட்லின் அருள் அளித்த புகாரின் பேரில் வினேஷ் மற்றும் அவரது மைத்துனர் நிக்கோம் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த காட்டுவிளை சந்திப்பில் மது அருந்திக் கொண்டிருந்ததாகவும், இதை கண்டித்து வீட்டுக்கு செல்லுமாறு கூறிய போது வினேஷ், நிக்கோம் உள்பட 4 பேர் ஏட்டு ஆட்லின் அருள் வீட்டுக்கு வந்து அவரையும், அவரது மனைவியையும் அவதூறாக பேசி அரசு பணி செய்ய விடாமல் தடுத்து ெகாலை மிரட்டல் விடுத்ததாக இந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.
பாலியல் ெதால்லை கொடுத்தாரா?
ஏட்டு ஆட்லின் அருள், வினேஷ் ஆகிய இருவரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் ஆவர். வினேஷ் மனைவி நதியா, தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவர் இந்த சம்பவம் குறித்து அளித்த புகாரில், தனது கணவர் வெளிநாட்டில் சில காலம் வேலை பார்த்து வந்தார். அப்போது ஏட்டு ஆட்லின் அருள் தன்னிடம் தவறாக நடக்க முயற்சித்தார். பல சந்தர்ப்பங்களில் தனக்கு பாலியல் தொந்தரவு தந்தார்.
நான் அவரை எச்சரித்தேன். இது தொடர்பாக என் மீதும், என் குடும்பத்தின் மீதும் ஆத்திரத்தில் இருந்தவர் இப்போது வேண்டுமென்றே எனது கணவர் மற்றும் எனது சகோதரர் மீது பொய்யான புகார் கூறி காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று மற்ற போலீசாருடன் சேர்ந்து சரமாரியாக தாக்கி உள்ளார். அதிர்ஷ்டவசமாக எனது கணவர் உயிர் தப்பினார். இந்த சம்பவத்தில் குமரி மாவட்ட காவல்துறை உரிய விசாரணை நடத்த வேண்டும் என கூறி உள்ளார்.
