- காரைக்குடி
- Thiruppuvanam
- சிவகங்கை மாவட்டம்
- இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனம்
- பாரத் பெட்ரோலியம்
- ரிலையன்ஸ்
காரைக்குடி: காரைக்குடி, திருப்புவனத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு காரணமாக பெரும்பாலான பங்க்குகள் மூடப்பட்டுள்ள நிலையில், திறந்திருக்கும் பங்க்குகளில் வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் செல்கின்றனர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், ரிலையன்ஸ், நயரா நிறுவனங்கள் சார்பில் 20க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்க்குகள் இயக்கப்படுகின்றன. இதில், பெரும்பாலான பங்க்குகளில் ‘ஸ்டாக் இல்லை’ என்னும் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
ஒரு சில பெட்ரோல் பங்க்குகளில் நள்ளிரவு 11 மணி வரை காத்திருந்து வாகன ஓட்டிகள் காத்திருந்து பெட்ரோல் நிரப்பிச் செல்கின்றனர். பலர் கேன்களில் பெட்ரோல் வாங்கிச் செல்கின்றனர். காரைக்குடியில் நேற்றும் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், இன்று இரண்டாவது நாளாகவும் தட்டுப்பாடு தொடர்கிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர் ஒருவர் கூறுகையில், ‘தினசரி எங்களுக்கு 10 முதல் 12 கலோன் பெட்ரோல் தேவைப்படும். (ஒரு கலோன்-1000 லி) ஆனால், மதுரை, திருச்சியில் இருந்து தினசரி 3 முதல் 4 கலோன் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது.
6,000 லிட்டர் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நகரில் பெரும்பாலான பங்க்குகள் காலை நேரத்தில் மட்டுமே செயல்படுகின்றன. தினசரி கிடைக்கும் 4 ஆயிரம் லிட்டர் தீர்ந்தவுடன் பங்க்குகள் மூடப்படுகின்றன. இதேபோல, டீசலும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான எண்ணெய் நிறுவனங்கள் கேட்பதை விட குறைவாகவே அனுப்புகின்றனர். காரணம் கேட்டால் அவர்களுக்கு உற்பத்திச் செலவு அதிகமாகி தொடர்ந்து நஷ்டம் ஏற்படுவதாக கூறுகின்றனர்.
திருப்புவனத்திலும் தட்டுப்பாடு
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியில் 10 பெட்ரோல் பங்க்குகள் உள்ளன. இதில், பெரும்பாலான பெட்ரோல் பங்க்குகளில் விற்பனை இல்லை என மூடியுள்ளனர். இதனால, நீண்ட தூர ஊர்களுக்கு டூவீலர்களில் வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் அவதிப்படுகின்றனர்.
இது குறித்து கட்டிடத் தொழிலாளி ஒருவர் கூறுகையில், ‘‘நானும் மற்றொரு தொழிலாளியும் திருப்புவனம் அருகில் கீழராங்கியத்தில் இருந்து மதுரைக்கு கட்டுமான வேலைக்கு செல்கிறோம். நாங்கள் வரும் வழியில் இரண்டு பெட்ரோல் பங்க்குகள் உள்ளன.
இரண்டிலும் பெட்ரோல் விற்பனை இல்லை என்கின்றனர். சில பங்க்குகளில் டீசல் மட்டுமே உள்ளது. பல பங்க்குகளில் நுழைவாயிலை அடைத்து வைத்து இரண்டுமே இல்லை என்கின்றனர். பெட்ரோல் விலை உயர்வு, தட்டுப்பாட்டால் கூலி வேலைக்கு செல்லமுடியாத நிலையில் அன்றாட வாழ்வாதாரம் பாதிப்படைகிறது’’ என்றார்.
திருமங்கலத்தில் 2வது நாளாக மூடல்
மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் 4 பெட்ரோல் பங்க்குகள் உள்ளன. இந்த பங்க்குகளுக்கு நேற்று லோடு வராததால் 4 பங்க்குகளும் மூடப்பட்டன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில், மதுரை ரோட்டிலுள்ள ஒரு பெட்ரோல் பங்க்கிற்கு மட்டும் இன்று காலை லோடு வந்தது. இதையறிந்த வாகன ஓட்டிகள் அங்கு குவிந்தனர். லோடு வந்த சிறிதுநேரத்தில் பெட்ரோல், டீசல் விற்று தீர்ந்தன. இதனால், பங்க் மீண்டும் மூடப்பட்டது. திருமங்கலத்தில் 2வது நாளாக பெட்ரோல் பங்க்குகள் மூடப்பட்டதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
