×

ஜல் ஜீவன் திட்டம் 2.0 திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஒன்றிய அரசுடன் தமிழக அரசு ஒப்பந்தம்

 

சென்னை: ஜல் ஜீவன் திட்டம் 2.0 திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஒன்றிய அரசுடன் தமிழக அரசு ஒப்பந்தம் கையெழுத்தானது. முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் இன்று சென்னை, தலைமைச் செயலகத்திலிருந்தும், ஒன்றிய அரசின் ஜல் சக்தித் துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல் புதுதில்லியிலிருந்தும் காணொலிக் காட்சி வாயிலாகக் கலந்து கொண்ட கூட்டத்தில், அவர்கள் முன்னிலையில் உயிர் நீர் இயக்கம் (ஜல் ஜீவன் மிஷன்) 2.0 திட்டத்தின் நீட்டிக்கப்பட்ட செயலாக்கக் காலத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திடப்பட்டது. உயிர் நீர் இயக்கம் (ஜல் ஜீவன் மிஷன்) திட்டம் முதற்கட்டமாக 2019-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரை செயல்படுத்தப்பட்டது.

தற்போது ஒன்றிய அரசினுடைய அமைச்சரவையின் ஒப்புதலின் அடிப்படையில் இத்திட்டம் 2028-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் முதற்கட்டமாக, ஒன்றிய ஜல் சக்தி அமைச்சகத்தின் தேசிய ஜல் ஜீவன் மிஷன் (NJJM) மற்றும் மாநில அளவிலான திட்ட ஒப்புதல் குழுவின் (SLSSC) ஒப்புதலுடன் தமிழ்நாட்டிலுள்ள 46.71 இலட்சம் வீட்டு குடிநீர் குழாய் இணைப்புகள் (Functional Household Tap Connections) வழங்கப்பட்டு, 1.86 கோடி மக்கள் பயன்பெறும் வகையில், 45 புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் (Multi Village Schemes – MVS), 56 கூட்டுக் குடிநீர்த் திட்டங்களை மறுசீரமைப்பு செய்தல் (Retrofitting CWSS) மற்றும் 21,258 ஒற்றைக் கிராமத் திட்டங்கள் (Single Village Schemes – SVS) செயல்படுத்தப்பட்டு வருகிறது.

முதற்கட்ட உயிர் நீர் இயக்கத் திட்டத்தின் கீழ், ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்களின் மதிப்பீடு ரூ.18,123.05 கோடி ஆகும். இதில் ஒன்றிய அரசின் பங்கு ரூ.9,025.68 கோடி மற்றும் தமிழ்நாடு அரசின் பங்கு ரூ.9,097.37 கோடி ஆகும். உயிர் நீர் இயக்கம் (ஜல் ஜீவன் மிஷன்) 2.0 திட்டத்தின் நீட்டிக்கப்பட்ட செயலாக்கக் காலத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) இன்று கையெழுத்திடப்பட்டதன் மூலம், ஒன்றிய அரசின் குடிநீர் மற்றும் சுகாதாரத் துறையால் (DDWS) தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய தொகையில் முதற்கட்டமாக ரூ.2,177.27 கோடி நிதி கிடைக்கப்பெறும்.

உயிர் நீர் இயக்கத் (ஜல் ஜீவன் மிஷன்) திட்டம் 2028-ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டிருப்பது, கிராமப்புறங்களில் உள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் பாதுகாப்பான, போதுமான மற்றும் நிலையான குடிநீர் வழங்கலை உறுதி செய்வதில் ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் கொண்டுள்ள தொடர்ச்சியான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது. இந்த நிகழ்ச்சியில் புதுதில்லியிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக மாண்புமிகு ஒன்றிய ஜல் சக்தி மற்றும் இரயில்வே துறை இணை அமைச்சர் வி. சோமன்னா, ஒன்றிய அரசின் ஜல்சக்தி அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை செயலாளர் அசோக் கே.கே. மீனா, டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் தலைமை உள்ளுறை ஆணையர் / கூடுதல் தலைமைச் செயலாளர் ஆர். ஜெயா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தலைமைச் செயலகத்திலிருந்து தலைமைச் செயலாளர் மு. சாய்குமார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சிறப்புச் செயலாளர் எஸ். கணேஷ், உயிர் நீர் இயக்கத் திட்ட இயக்குநர் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Government of Tamil Nadu ,EU Government ,Chennai ,Union Government ,Chief Minister ,C. Josef Vijay ,Chief Secretariat ,Minister of ,Jal ,Energy ,of the Union ,C. R. Patil ,New Delhi ,
× RELATED ராமநாதபுரத்தில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு...