×

ஏற்காட்டில் 49வது கோடை விழா; நாளை மலர் கண்காட்சி துவக்கம்

சேலம்: ஏற்காட்டில் 49வது கோடை விழா மலர் கண்காட்சி நாளை தொடங்க உள்ளது. சேலம் மாவட்டத்தின் முதன்மை சுற்றுலாதலமான ஏற்காடு மலைகளின் அரசன், ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் நடத்தப்படும் கோடை விழா மற்றும் மலர்கண்காட்சியை காண ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டிற்கு வந்து செல்கின்றனர். நடப்பாண்டு 49வது கோடைவிழா மற்றும் மலர்கண்காட்சி நாளை (வெள்ளி) தொடங்கி வரும் 28ம்தேதி வரை 7 நாட்களுக்கு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாளை நடக்கும் தொடக்க விழாவில், பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட உள்ளது. கோடை விழாவை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள், குழந்தைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, தோட்டக்கலைத்துறையின் சார்பில், அண்ணா பூங்காவில் 2 லட்சம் மலர்களை கொண்டு மலர்க்காட்சி, பழக்கண்காட்சி மற்றும் காய்கறி கண்காட்சிகள் அமைக்கப்படுகிறது. காளை மாடு, கன்றுக்குட்டியுடன் கறவை பசு, முயல், வாத்து, ஆடு, நாய், கோழி, சேவல் உள்ளிட்ட வடிவமைப்புகள், டெடி பேர்,தேவதை, பரதநாட்டிய மங்கைகள், இரட்டை இதயம், மான் உருவம், பிறை நிலா, சிறகுகொண்ட இதயம் உள்ளிட்ட உள்ளிட்ட பல்வேறு வடிவமைப்புகள், வண்ண மலர்களை கொண்டு அமைக்கப்படுகிறது. 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வண்ணமலர் தொட்டிகள் காட்சிப்படுத்தப் படுகிறது.

இதேபோல் தாவரவியல் பூங்கா, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், சேர்வராயன் மலை, படகு இல்லம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகளுக்கான பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஏற்காடு மலைப்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, விபத்துக்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கனரக மற்றும் 4 சக்கர வாகனங்கள், ஏற்காடுசெல்ல கோரிமேடு-அடிவாரம் வழியாகவும் கீழே இறங்கும் போது கொட்டச்சேடு-குப்பனூர் சாலை வழியாக செல்ல ஒருவழிப் பாதையாகவும் மாற்றப்பட்டுள்ளது. கோடை விழாவை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து சிறப்பு பஸ் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags : 49th Summer Festival ,Yerevan ,Show ,Salem ,49th Summer Festival Flower Show ,Avrat ,Salem district ,King of the Mountains ,Feeder of the Poor ,
× RELATED மெலோனிக்கு கொடுத்த மெலோடியால் உச்சத்துக்கு போன தப்பான பங்கு