சென்னை: தமிழக அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் மீண்டும் வந்தே மாதரம் பாடலுக்கு முதலிடம்; தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மூன்றாமிடம் வழங்கப்பட்டதற்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி: ஆளுநர் மாளிகையில் நடந்த அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்கு தள்ளப்பட்டதை போலவே தமிழ்நாடு எல்லா வகையிலும் இனிமேல் பின்னுக்கு தள்ளப்படும் என்பதற்கு த.வெ.க. அமைச்சர்கள் பதவியேற்பு விழாவே சான்று. தமிழ்த்தாய் வாழ்த்துக்கு தொடர் அவமதிப்பும் ஏற்பட்டுள்ளது. அத்துடன், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டதற்கு தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழோடு விளையாடியவர்கள் யாரும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி: 23 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்ச்சியின் தொடக்கத்தில், முதலிடம் ‘வந்தே மாதரம்’ பாட்டுக்கு. இரண்டாவது, ‘ஜன கண மன அதி நாயக’ ‘நாட்டுப் பண்’ என்பதைப் பாடி, ‘நீராரும் கடலுடுத்த’ என்ற மொழி வாழ்த்துப் பாடல் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. முந்தைய ‘திராவிட மாடல்’ அரசு, தொடர்ந்து கடைபிடித்த தமிழுக்கு முதலிடம் தந்து, தேசியப் பண் சட்டமன்றத்தில் இறுதியில்தான் இசைக்கப்படும் வகையில் நிகழ்வை நடத்தியபோது, அதற்கு அடாவடித்தனம் செய்த, முன்னிருந்த ஆர்.என்.ரவி என்ற ஆளுநரின் போக்கை அனுமதிக்காமல், இந்த உரிமையை அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிலைநாட்டினார்.
ஆனால் இம்முறையும் தமிழுக்கு நிரந்தரமாக மூன்றாம் இடம் என்றாக்கியுள்ளார் பொறுப்பு ஆளுநர் அர்லேகர்; அதனை ஏற்றுக்கொண்டுள்ளது தமிழ்நாடு புதிய அரசு. முன்பு, இதுபற்றி வன்மையான கண்டனத்தை தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கட்சிகளும், நாமும் எழுப்பிய நிலையில், புதிய முதலமைச்சர் சார்பில், அவரது அமைச்சர்களில் ஒருவரான ஆதவ் அர்ஜூனா மூலம், ‘‘இனிமேல் இப்படி நடக்காது’’ என்றும், ‘‘தமிழ் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படுவதை ஏற்கமாட்டோம்’’ என்றும் கூறப்பட்ட வாக்குறுதி, இவ்வளவு விரைவில், சில நாட்களிலேயே காற்றில் பறக்கவிடப்படுகிறதா? இந்த ஆட்சியின் தொடக்கமே தமிழ்நாட்டின் மரபை உடைத்து,
சமஸ்கிருதத்தினை முதன் மொழியாக்கி, தமிழை மூன்றாவது இடத்திற்கு தள்ளிவிட்டு மகிழும் ஆர்.எஸ்.எஸ். சமஸ்கிருதப் பண்பாட்டு திணிப்பை, டில்லி எஜமான தனத்திற்கு அடிபணியும் போக்குக்கு இடம் தந்து தமிழ்நாட்டிற்கு தலைக்குனிவை ஏற்படுத்துவதா? ‘கொள்கை எதிரிகளிடம்’ இப்படி ஒரு சமரசப் போக்கா? இதை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்கவே ஏற்காது! புதிய ஆட்சியின் ‘‘நம்பகத்தன்மை’’ இப்போது இவ்வளவு குறுகிய இடைவெளியில் சந்தேகத்திற்குரிய கேள்விக்குறியாகலாமா? முன்பு, ஆளுநர் மாளிகையின் ‘லோக் பவன்’ ஏற்பாடு செய்தது என்று ஒருவகை சமாதானம் கூறப்பட்டது.
இப்போது புதிய முதலமைச்சராகியுள்ள ஜோசப் விஜய்யின் ஆணைப்படி நடக்கவேண்டிய பொதுத் துறை நிகழ்ச்சிதானே, இந்த பதவியேற்பு நிகழ்ச்சி நிரல் முறைப்படி, புதிய முதலமைச்சர் ஒப்புதலுடன்தானே நடந்திருக்கவேண்டும்? இது தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்தமான உணர்வு பொங்கும், உணர்ச்சிப்பூர்வமான பிரச்னை. அதனை அலட்சியப்படுத்துவது வன்மையான கண்டனத்திற்குரியது. இதை தமிழ்நாட்டு மக்களின் எச்சரிக்கையாகக் கொண்டு, பார்க்கத் தவறினால், அதன் பாரதூர விளைவுகளை இவ்வளவு விரைவில் ஏற்கவேண்டிய கட்டாயம் புதிய அரசுக்கு ஏற்படுவது தவிர்க்க முடியாதது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
