×

மெலோனிக்கு கொடுத்த மெலோடியால் உச்சத்துக்கு போன தப்பான பங்கு

 

சென்னை: இத்தாலி பிரதமர் மெலோனிக்கு இந்திய பிரதமர் மோடி, ‘மெலோடி’ சாக்லெட் கொடுத்தது உலகம் முழுவதும் வைரலாகி விட்டது. இதைத் தொடர்ந்து மெலோடி சாக்லெட் தயாரிக்கும் பார்லே கம்பெனியின் பங்குகளை, ‘பங்கு வர்த்தக புலிகள்’ வாங்கிக் குவிக்கத் தொடங்கிவிட்டனர்.ஆனால் அதில் ஒரு சின்னத் தப்பு நடந்துவிட்டது. பலர் வாங்கிப் போட்டது பார்லே இன்டஸ்ட்ரீஸ் பங்குகளை. இதற்கும் சாக்லெட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பார்லெ இன்டஸ்ட்ரீஸ் மும்பையை தலைமையிடமாக கொண்ட ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான கம்பெனி. கொஞ்சம் வீழ்ச்சியில் இருந்த இதன் பங்கு வர்த்தகம், மெலோடி பைத்தியத்தால் ஒரே நாளில் சர்ரென உயர்ந்தது.

வர்த்தகம் தொடங்கி சிறிது நேரத்திலேயே, காலை 10.03 மணியளவில் 5 சதவீதம் அதிகரித்து ரூ.5.51 என்ற நாள் உச்சத்தை எட்டியது. மெலோடி சாக்லெட்டை தயாரிக்கும் பார்லே புராடக்ஸ் பங்கு வர்த்தக பட்டியலில் இல்லை என்பது இன்னொரு துயரம். அதேநேரத்தில், மெலோடி சாக்லேட் விற்பனை சக்கைப் போடு போட தொடங்கி விட்டது. இது குறித்து பார்லே துணை தலைவர் மயானக் ஷா கூறுகையில், மெலோனிக்கு மெலோடி சாக்லெட்டை பிரதமர் பரிசளித்த செய்தி வைரலான பிறகு, இந்த சாக்லேட் தொடர்பான விசாரணைகள் அதிகம் வந்துள்ளன.

திடீரென டிமாண்ட் அதிகரித்தது. இந்த சாக்லேட் இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் சாக்லேட்டுகளில் ஒன்று. 200க்கும் மேற்பட்ட நாடுகளில் இது விற்பனை செய்யப்படுகிறது. உலக அளவில் தற்போது பெரிய அளவில் பிரபலம் அடைந்த விட்டது, என்றார்.

Tags : Meloni ,Chennai ,Modi ,Parle Company ,Melody ,
× RELATED சேலம் அருகே தனியார் பள்ளியில்...