பயணிகள் மீதும் தாக்குதல்
கண்ணமங்கலம்: விஜய்யை பற்றி பயணிகள் தவறாக பேசியதாக கூறி கண்ணமங்கலம் அருகே அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தி இறங்கிய வாலிபர் கற்கள் வீசி ரயில் கண்ணாடியை உடைத்ததோடு, பயணிகளையும் தாக்கினார். இதனால் ரயில்வே கேட் மூடப்பட்டு அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பாக காணப்பட்டது. புதுச்சேரியில் இருந்து ஹவுராவுக்கு நேற்றுமுன்தினம் சிறப்பு அதிவேக ரயில் புறப்பட்டது. நேற்று பிற்பகல் திருவண்ணாமலை-போளூர் வழியாக கண்ணமங்கலம் அருகே ஒண்ணுபுரம் பகுதியில் திடீரென ரயில் நின்றது.
தொடர்ந்து ரயிலில் இருந்து சட்டை கூட அணியாமல், லுங்கியுடன் இறங்கிய வாலிபர் ரயில் மீதும், பயணிகள் மீதும் சரமாரியாக கற்களை வீசி தாக்கினார். இதில் ரயில் கண்ணாடி உடைந்தது. இதனால் ஹவுராவுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் ஒண்ணுபுரம் பகுதியில் சுமார் 20 நிமிடம் நின்றது. லோகோ பைலட் மற்றும் ரயில்வே அதிகாரிகள் சவந்து விசாரணை நடத்தினர். அதில் ரயில் மீதும், பயணிகள் மீதும் கற்களை வீசிய நபர்தான், அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தியது தெரியவந்தது. இதுபற்றி காட்பாடி ரயில்வே போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் வந்து விசாரணை நடத்தினர்.
இதில் கல்வீசியவர் தர்மபுரியை சேர்ந்த ஜோசப்மணி என்றும் இவர் ஒரு தனியார் பேக்கரியில் பணிபுரிந்து வருவதாகவும் தெரிவித்தார். திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் ரயிலில் ஏறியவுடன் சக பயணிகள் முதல்வர் விஜய்யை பற்றி தவறாக பேசிக்கொண்டிருந்ததால், ஆத்திரத்தில் இவ்வாறு செய்ததாக தெரிவித்துள்ளார். ஆனால் பயணிகள் அந்த வாலிபர் ரயிலில் ஏறியதும் தானாகவே பயணிகளை ஆபாசமாக பேசி ரகளையில் ஈடுபட்டு இதுபோன்று நடந்து கொண்டதாக தெரிவித்தனர். இதையடுத்து காட்பாடி ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து ஜோசப் மணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனால் 20 நிமிடம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது. இதற்கிடையில் கண்ணமங்கலம் ரயில்வே கேட், காவல் நிலையம் அருகே உள்ள ரயில்வே கேட், கொங்கராம்பட்டு கேட் ஆகிய மூன்றும் வழக்கமான நேரத்திற்கு மூடப்பட்டது. அரை மணி நேரம் சிக்னல் கிடைக்காததால் கேட்டுகளை திறக்க முடியவில்லை. இதனால் வேலூர் திருவண்ணாமலை சாலையில் கண்ணமங்கலம் பஜார் வரை, வேலூர் – ஆரணி சாலையில் டோல்கேட் வரை என் கண்ணமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள ரயில்வே கேட்டின் இருபுறமும் ஒரு கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் வரிசை கட்டி நின்றது. இதனால் போக்குவரத்து அரை மணி நேரம் ஸ்தம்பித்தது. பின்னர் சிக்னல் கிடைத்ததால் கேட்டுகளை திறந்தனர்.
