×

ஒன்றிய அரசின் நிர்ப்பந்தங்களுக்கு தமிழக அரசு பணிந்தால் மீண்டும் ஒரு மொழிப்போர்: மதுரையில் வைகோ உறுதி

 

மதுரை: மதிமுக தென்மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், மதுரையில் நேற்று நடைபெற்றது. இதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமை வகித்தார். கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம், அவர் கூறியதாவது: ஜூன் 27ல் மதிமுக பொதுக்குழு சென்னையில் கூடுகிறது. இதில் 3 துணை பொதுச்செயலாளர்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. மே 25 முதல் வேட்பாளர் விண்ணப்பம் பெறப்படும். ஒவ்வொரு வேட்பாளரையும் 25 பொதுக்குழு உறுப்பினர்கள் முன்மொழிய வேண்டும். தமிழகத்தில் பி.எம் திட்டத்தை எப்படியும் திணித்து விடலாம் என, ஒன்றிய அரசு முயற்சிக்கிறது. எக்காரணம் கொண்டும் அதனை அனுமதிக்க கூடாது என முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

இந்த திட்டத்தை எதிர்த்தே ஆக வேண்டும். ஒன்றிய அரசின் நிர்ப்பந்தத்திற்கு பணிந்தால் மீண்டும் ஒரு மொழிப்போர் நிகழும். ஆளுநர் மாளிகையில் நடந்த அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில் வந்தே மாதரம் திணிக்கப்படுகிறது. பதவிப் பிரமாண ஏற்பாடுகளை ஆளுநர் செய்வதால் இப்படி நடக்கிறது. இருப்பினும் தமிழக அரசு விழாக்களில், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். கூட்டாட்சி தத்துவத்திற்கு எந்த இடையூறும் வராமல், அதிக அதிகாரங்களை பெறும் வகையில் தமிழக அரசின் அணுகுமுறை இருக்க வேண்டும். மதச்சார்பின்மையை பாதுகாக்கும் கொள்கையில் திமுக உறுதியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Tamil Nadu government ,Union government ,Vaiko ,Madurai ,MDMK ,general secretary ,Chennai ,
× RELATED சேலம் அருகே தனியார் பள்ளியில்...