பெரணமல்லூர், ஏப்.29: பெரணமல்லூர் அருகே மர்ம நபர்கள் வைத்த தீயால் எரிந்து கொண்டிருந்த பனை மரங்களை தீயணைப்பு துறையினர் போராடி அணைத்தனர். கோடை வெயில் தாக்கத்தால் பச்சை மரங்கள் காய்ந்து மடிந்து வருகிறது. இவ்வாறு காய்ந்து உள்ள மரங்களை விஷமிகள் தீ வைத்து எரித்து வருகின்றனர். இந்நிலையில், பெரணமல்லூர் அடுத்த இஞ்சிமேடு கூட்ரோடு அருகே பனை மரங்கள் உள்ளது. இந்த பனை மரங்களை நேற்று மாலை அந்த வழியாக சென்ற மர்ம நபர்கள் தீ வைத்து விட்டு சென்றுள்ளனர். இதில் பனை மரத்தோடு அருகில் காய்ந்த நிலையில் இருந்த செடிகளும் கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. அப்போது அந்த வழிய சென்ற பொதுமக்கள் பனைமரம் மற்றும் செடிகள் தீப்பற்றி எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உடனடியாக பெரணமல்லூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்தவுடன் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் (போக்குவரத்து) சங்கர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து எரிந்து கொண்டிருந்த பனை மரங்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்து போராடி அணைத்தனர். இதனால் பெரிய தீ விபத்து தடுக்கப்பட்டது.
