×

18,723 தபால் வாக்குகள் பதிவு மூத்த குடிமக்கள், தேர்தல் பணி அலுவலர்களிடம்

திருவண்ணாமலை, ஏப். 23: திருவண்ணாமலை மாவட்டத்தில் மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் தேர்தல் பணி அலுவலர்களிடம் இருந்து 18,723 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. அதை ஒட்டி மாவட்டம் முழுவதும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வாக்குப்பதிவுக்கு தயார் நிலையில் உள்ளன. இந்நிலையில், 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், காவல்துறையினர் ஆகியோர் தபால் வாக்குகள் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

அதற்காக, சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. மேலும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட பயிற்சி மையங்களிலும் தபால் வாக்கு அளிக்க வசதிகள் ஏற்படுத்தப்பட்டது. அதன் மூலம், இந்த தேர்தலில் அதிக எண்ணிக்கையில் தபால் வாக்குகள் பதிவாகும் நிலை உருவாகியுள்ளது. மேலும், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்காளர்களின் வீடுகளுக்கே சென்று தபால் வாக்குகளை சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலர்கள் சேகரித்தனர். அதன்படி, மூத்த குடிமக்களிடமிருந்து 4,109 தபால் வாக்குகளும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 4,304 தபால் வாக்குகளும், பெறப்பட்டுள்ளது. மேலும், அத்தியாவசியப்பணிகளில் பணியாற்றும் அலுவலர்களிடமிருந்து 860 தபால் வாக்குகளும், தேர்தல் பணிகளில் ஈடுபடும் வாக்குப்பதிவு அலுவலர்கள், காவல் அலுவலர்கள் மற்றும் இதர தேர்தல் அலுவலர்களிடமிருந்து இதுவரை 9,450 தபால் வாக்குகள் உட்பட மொத்தம் 18,723 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளது.

Tags : Tiruvannamalai ,Tiruvannamalai district ,
× RELATED மர்ம நபர்கள் வைத்த தீயால் எரிந்த பனை...