×

19.34 லட்சம் பேர் வாக்களிக்க விரிவான ஏற்பாடுகள் திருவண்ணாமலை மாவட்டத்தில் 2,516 வாக்குச்சாவடிகளில்

திருவண்ணாமலை, ஏப். 23: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் 2,516 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளன. தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை, செங்கம்(தனி), கீழ்பென்னாத்தூர், கலசபாக்கம், போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி(தனி) ஆகிய 8 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. அதையொட்டி மாவட்டம் முழுவதும் 2,516 வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 19 லட்சத்து 34 ஆயிரத்து 582 வாக்காளர்கள் வாக்களிக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும். முன்னதாக, முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தி, மின்னணு இயந்திரத்தின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படும்.

அதைத்தொடர்ந்து, உணவு இடைவேளை எதுவும் இல்லாமல் மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும். வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக ‘பூத் சிலிப்’ ஏற்கனவே வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டுள்ளன. வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள 12 ஆவணங்களில் ஏதேனும் ஒரு ஆவணத்தை காண்பித்து வாக்களிக்கலாம். வாக்காளர்கள் வசதிக்காக வாக்குச்சாவடிகளில் நிழற்பந்தல், குடிநீர், மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்தள பாதை மற்றும் தேவைக்குரிய இடங்களில் சக்கர நாற்காலி வசதி, மின் விளக்கு வசதி போன்றவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், 12,076 வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை நேற்று துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேவையான பொருட்கள் அனைத்தும் சென்று சேர்ந்தன. அந்த பணியை கலெக்டர் தர்ப்பகராஜ் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் ஆகியோர் அனைத்து தொகுதிகளுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்தனர். மேலும் மாவட்டம் முழுவதும் 80 பதற்றமான வாக்குச்சாவடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 138 நுண் பார்வையாளர்கள், 229 மண்டல அலுவலர்கள் ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

Tags : Tiruvannamalai district ,Tiruvannamalai ,Tamil Nadu Assembly elections ,Tamil Nadu Assembly general elections ,
× RELATED மர்ம நபர்கள் வைத்த தீயால் எரிந்த பனை...