- மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்ராய் திருவிழா
- மதுரை
- மதுரை மீனதாசி அம்மன் கோயில் சித்திரை திருவிழா
- தெரோதம்
- வைகயத்தர்
- மதுரை மீனாட்சி
மதுரை: உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 29ம் தேதியும், மே 1ம் தேதி வைகையாற்றில் அழகர் இறங்கும் வைபவமும் நடைபெறுகிறது. உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 12 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. முன்னதாக, சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மனும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் சுவாமி சன்னதி முன்புள்ள கொடிமரம் அருகே எழுந்தருளினர். கொடிமரம் பூக்களால் அலங்கரிக்கபட்டிருந்தது. காலை 10.35 மணியளவில் மிதுன லக்னத்தில் கோயில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜை, தீர்த்தம் தெளித்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.நிகழ்ச்சியில் கோயில் தக்கார் ருக்மணி பழனிவேல்ராஜன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சித்திரை திருவிழா நடைபெறும் 12 நாட்களும் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் – பிரியாவிடை தினமும் காலை, இரவு என இருவேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். விழாவில் வரும் 26ம் தேதி 7.35 மணிக்கு மேல் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம், 27ம் தேதி திக்குவிஜயம் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக 28ம் தேதி காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் மீனாட்சி அம்மன்- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், 29ம் தேதி மாசி வீதிகளில் சுவாமி, அம்பாள் திருத்தேரோட்டம் நடைபெறும். 30ம் தேதி தீர்த்தவாரியுடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கிடையே, அழகர்கோவில் மலையில் இருந்து அழகர் வரும் 29ம் தேதி பல்லக்கில் புறப்படுகிறார். 30ம் தேதி மூன்றுமாவடியில் கள்ளழகர் எதிர் சேவை, மே 1ம் தேதி அதிகாலை 5.35 மணி முதல் 5.55 மணிக்குள் கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம் நடைபெறுகிறது.
திருக்கல்யாணத்தை நேரில் தரிசிக்க டிக்கெட் முன்பதிவு இன்று துவக்கம்;
மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் 28ம் தேதி நடைபெறுகிறது. இதனை நேரில் காண உள்ளூர், வெளியூர், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். இவர்களது வசதிக்காக இந்து சமய அறநிலையத்துறை இணையதளம் hrce.tn.gov.in மற்றும் கோயிலின் இணையதளமான maduraimeenakshi.hrce.tn.gov.in என்ற முகவரியில் முன்பதிவு இன்று (ஏப்.19) தொடங்கியது. இதில் வரும் 22ம் தேதி இரவு 9 மணி வரை ரூ.500, ரூ.200 டிக்கெட்டுகளுக்கு முன்பதிவு செய்யலாம். ஒரு நபர் இரண்டு ரூ.500 கட்டணச் சீட்டுகள் மட்டுமே முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுவர். ரூ.200 கட்டண சீட்டு பதிவில் ஒரே நபர் 3 சீட்டுகள் வரை முன்பதிவு செய்யலாம். ஒரே நபர் ரூ.500 மற்றும் ரூ.200 கட்டண சீட்டுகளை பதிவு செய்ய முடியாது. ஒரு பதிவுக்கு ஒரு கைபேசி எண் மட்டும் பயன்படுத்தலாம். மேலும், கோயிலுக்கு சொந்தமான எல்லீஸ் நகரில் உள்ள பாத்ரிநிவாஸ் தங்கும் விடுதியில் காலை 10 முதல் மாலை 6 மணி வரை கோயில் பணியாளர்கள் மூலம் முன்பதிவு செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது.
