சென்னை: அட்சய திருதியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நகைக்கடைகளில் கூட்டம் நேற்று காலை முதல் அலைமோதியது. சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய 3வது திருதியையான வளர்பிறை திருதியை ‘அட்சய திருதியை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த நாள் நல்ல அதிர்ஷ்டத்தையும், வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறது.
குறிப்பாக, தங்கம், வெள்ளி, அவற்றினால் செய்யப்பட்ட நகைகள், வைரம் மற்றும் இதர விலை மதிப்பற்ற கற்கள் மற்றும் வீடு, மனை போன்றவற்றை வாங்க உகந்த நாளாகவும் கருதப்படுகிறது. அதன்படி இந்தாண்டு அட்சதிருதியை நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இன்று(திங்கட்கிழமை) காலை 7.27 மணி வரை அட்சயதிருதியை வருகிறது.
அட்சய திருதியை முன்னிட்டு நகைக்கடைகள் தமிழகம் முழுவதும் நேற்று காலை 6 மணிக்கே திறக்கப்பட்டது. வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஒவ்வொரு நகைக்கடைகள் முன்பாக மேளதாளங்கள், முழங்கவும், செண்டை மேளம் வரவேற்பு அளிக்கப்பட்டது. சிவப்பு கம்பளம் விரிந்து வாடிக்கையாளர்கள் வரவேற்கப்பட்டனர்.
கடைகள் முன்பாக அலங்கார தோரணங்கள் அமைக்கப்பட்டிருந்தது. அதனால் அனைத்து நகைக்கடைகளும் மின்னொலியில் ஜொலித்தது. குறிப்பாக, சென்னை தி.நகர், புரசைவாக்கம், பாரிமுனை, வண்ணாரப்பேட்டை, வடபழனி, குரோம்பேட்டை, பாடி, தாம்பரம் உட்பட பல இடங்களில் உள்ள நகைகடைகள் காலையிலேயே திறக்கப்பட்டன. காலை முதலே நகைக்கடைகளில் மக்கள் கூட்டத்தை அதிகமாக காணமுடிந்தது. நேரம் ஆக, ஆக நகை வாங்க ஏராளமான பெண்கள் குவிந்தனர். அவர்கள் தங்களுக்கு பிடித்த நகைகளை ஆர்வமுடன் தேர்வு செய்து வாங்கி சென்றனர்.
அட்சயதிருதியை அன்று நகைக்கடைகளில் கூட்டம் அதிக அளவில் இருக்கும் என்பதால் பெரும்பாலானோர் கடந்த 15 நாட்களுக்கு முன்பே 25 சதவீதம் பணத்தை செலுத்தி முன்பதிவு செய்திருந்தனர். அவர்கள் நேரடியாக நகைக்கடைகளுக்கு சென்று மீதமுள்ள பணத்தை செலுத்தி தாங்கள் ஏற்கெனவே தேர்வு செய்து வைத்திருந்த நகைகளை எந்தவித சிரமமும் இன்றி வாங்கி சென்றனர்.
முன்பதிவு செய்யாதவர்கள் காத்திருந்து நேற்றைய விலைக்கு தங்கத்தை தேர்வு செய்து வாங்கி சென்றனர். தங்க நாணயம் வாங்க நகைக்கடைகளில் தனியாக கவுண்டர்கள் அமைக்கப்பட்டு தனி வரிசை ஏற்படுத்தப்பட்டு இருந்தது. அவர்கள் வரிசையில் சென்று தங்க நாணயங்களை வாங்கினர். அட்சயதிருதியைக்கு செய்கூலி, சேதாரத்தில் சிறப்பு தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வேறு அளிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து நகை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கூறும் போது, ‘அட்சய திருதியை கொண்டாட்டத்தையொட்டி தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் நகைக்கடைகள் காலை 6 மணிக்கே திறக்கப்பட்டன. தியாகராய நகரில் உள்ள நகைக்கடைகளில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
தங்கத்தின் விலை அதிகரித்தாலும் பொதுமக்களிடம் வாங்கும் ஆர்வம் பெரிய அளவில் குறையவில்லை. வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டன. தங்கம் விலை 14 ஆயிரத்தை கடந்தாலும் மக்கள் முதலீடு செய்வதற்காக ஆர்வத்துடன் வாங்கினர். வாடிக்கையாளர்கள் ஆர்வமுடன் காலை முதல் நகைகளை வாங்கிச் சென்றனர். தேர்தல் நடைமுறை விதிகளை பின்பற்றி வியாபாரம் நடைபெற்றது” என்றனர். கடந்த ஆண்டு(2025ம் ஆண்டு) அட்சயதிருதியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நகை விற்பனையானது. இந்த ஆண்டு அதை விட சற்று விற்பனை அதிகரித்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.
