×

தேவையான திட்டங்கள் அனைத்தையும் செய்து கொடுத்துள்ளதால்.. மக்களிடம் தைரியமாக வாக்கு கேட்டு செல்கிறோம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேட்டி

 

மக்களுக்குத் தேவையான அனைத்து திட்டங்களையும் திராவிட மாடல் அரசு செய்து கொடுத்துள்ளதால், மக்களிடம் நாங்கள் தைரியமாக வாக்கு கேட்டு செல்கிறோம் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறினார். குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் துறை அமைச்சரும் ஆலந்தூர் சட்டப்பேரவை தொகுதி வேட்பாளருமான தா.மோ.அன்பரசன் அளித்த சிறப்பு பேட்டி:
?தற்போதைய சூழலில் தேர்தல் களம் எப்படி உள்ளது?

தேர்தல் களம் திமுக கூட்டணிக்குச் சாதகமாக உள்ளது. மக்கள் மத்தியில் பெரிய அளவு ஆதரவு உள்ளது. எங்கள் தலைவர் செய்துள்ள சாதனைகள், கூட்டணி பலம், தேர்தல் அறிக்கை, திமுக செயல்படுத்திய திட்டங்கள் மக்களிடம் சென்று சேர்ந்துள்ளது, தமிழ்நாடு முழுவதும் அந்தந்த மாவட்டங்களுக்குத் தேவையான வளர்ச்சிப்பணிகளைச் செய்துள்ளோம். இந்த காரணங்களால் திமுக கூட்டணிக்கு மக்களிடம் செல்வாக்கு உள்ளது. கடந்த தேர்தலில் இருந்ததைவிடச் சில கட்சிகள் கூட்டணியில் இணைந்துள்ளது. அதனால், 200 தொகுதிகளுக்கு மேல் திமுக கூட்டணி நிச்சயமாக வெற்றிபெறும்.

* குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் கடந்த 5 ஆண்டுகளில் எவ்வளவு வளர்ச்சி அடைந்துள்ளது? அதிமுக ஆட்சியை ஒப்பிடுகையில் இப்போதைய வளர்ச்சி எந்த விதத்தில் உள்ளது?

10 ஆண்டு கால அதி.மு.க ஆட்சியில் 55 ஆயிரத்து 230 தொழில் முனைவோர்கள் மட்டுமே உருவாக்கப்பட்ட நிலையில், திமுக ஆட்சியில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், கலைஞர் கைவினைத் திட்டம் உள்ளிட்ட 6 திட்டங்களின் கீழ், ரூ.2,511 கோடி மானியத்துடன் ரூ.6,483 கோடி வங்கி கடனுதவி வழங்கப்பட்டு, 81,598 இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக உருவாக்கப்பட்டுள்ளனர்.

மேலும், அதிமுக ஆட்சியில் 06.05.2021 நிலவரப்படி, 3,10,610 எம்எஸ்எம்இ நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டு, 33,47,447 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டது. திமுக ஆட்சிக் காலத்தில் 41,18,410 எம்எஸ்எம்இ நிறுவனங்கள் உத்யம் பதிவு இணையதளத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு, 2,97,33,722 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பதிவு செய்யாத எம்எஸ்எம்இ நிறுவனங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் இந்திய அளவில் தமிழ்நாடு எம்எஸ்எம்இ துறையில் 2ம் இடம் வகிக்கும். அ.தி.மு.க ஆட்சி காலத்தில், 2016-2021 ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்ட அதிகபட்ச ஆண்டு ஒதுக்கீடு ரூ.543 கோடியாகவும், அதே காலகட்டத்தில் மொத்த ஒதுக்கீடு ரூ.2.334 கோடியாக மட்டுமே இருந்தது.

ஆனால், முதல்வர் தலைமையிலான அரசு 2021-2025 காலகட்டத்தில் நிதி ஒதுக்கீட்டினை பன்மடங்கு உயர்த்தி அதிகபட்ச ஆண்டு நிதி ஒதுக்கீடு ரூ.1.911 கோடியாகவும். 5 ஆண்டுகளின் மொத்த ஒதுக்கீடு ரூ.6.602 கோடியாகவும் உயர்த்தியது. கடந்த ஆட்சியை விட இது அதிகபட்ச ஆண்டு ஒதுக்கீட்டில் 352 விழுக்காடு வளர்ச்சியையும், மொத்த ஒதுக்கீட்டில் 3.45 மடங்கும் உயர்ந்துள்ளது.

* திமுக ஆட்சிக்கு வரும்போது கொரோனா காலம். அப்போது ஏற்பட்ட பின்னடைவில் இருந்து நிறுவனங்களை எவ்வாறு மீட்டீர்கள்?

பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் துறை எம்எஸ்எம்இ. அந்தத் துறையை மீட்டெடுக்க ஓய்வு பெற்ற ஐஏஎஸ் சுந்திரதேவன் தலைமையில் முதல்வர் ஒரு வல்லுநர் குழுவை அமைத்தார். அந்தக் கமிட்டி ஒரு மாதத்தில் ஒரு அறிக்கை அளித்தது. அந்த அறிக்கையை முழுமையாகச் செயல்படுத்தி அடுத்த 6 மாதத்தில் நலிவில் இருந்த அந்தத் துறையை தூக்கி நிறுத்திய பெருமை முதல்வரையே சேரும்.

* இந்தத் துறையில் தமிழகம் முழுவதும் சமமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உருவாக்க என்னென்ன திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது?

இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டமான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரை தொழில்முனைவோர்களாக உருவாக்கும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம். அனைத்து கைவினை கலைஞர்களுக்கும் மானியத்துடன் கடன் உதவி வழங்கிடும் கலைஞர் கைவினைத் திட்டம். மகளிரை தொழிழ்முனைவோராக்கும் மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்.

தொழில்முனைவோருக்கு எளிதில் கடன் கிடைத்திட தமிழ்நாடு கடன் உத்தரவாதத் திட்டம். கிராமப்புறப் பகுதிகளில் உள்ள தொழில்முனைவோரின் வளர்ச்சிக்காகவும், நிலையான வேலைவாய்பிற்காகவும் குறுங்குழும மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கடலூர், கோயம்புத்தூர், தஞ்சாவூர், உள்ளிட்ட 18 மாவட்டங்களில் 25 குறுங்குழுமங்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் 102 தொழிற்கூடங்களுடன் வெள்ளி கொலுசு உற்பத்தி வளாகம் கட்டப்பட்டு பயன்பாட்டிற்காக கொண்டுவரப்பட்டுள்ளது.

எம்எஸ்எம்இ நிறுவனங்கள் உலகத்தரத்தில் உற்பத்தி செய்திட நவீன தொழில்நுட்ப வசதியை அளித்திடும் பெருங்குழும மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் திருமுடிவாக்கத்தில் நுல்லிய உற்பத்தி பெருங்குழுமம் மற்றும் திண்டிவனத்தில் மருந்தியல் பெருங்குழுமங்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

தொழிலாளர்கள் பணிபுரியும் பகுதியிலேயே அவர்களுக்கு குறைந்த வாடகையில் தொழிலாளர் தங்கும் விடுதிகள். தொடக்க நிலையில் உள்ள புத்தொழில் நிறுவனங்களுக்கு உதவிடும் புத்தொழில் ஆதார நிதி வழங்கும் திட்டம். தமிழ்நாடு உணவுப் பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் உருவாக்கம். பள்ளி மாணவ மாணவியருக்கு தொழில் முனைவு மற்றும் புத்தாக்க விழிப்புணர்வு அளிக்கப்பட்டுள்ளது. குறு. சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைக்கு தேவையான புதிய தொழிற்பேட்டைகளை உருவாக்கும் திட்டத்தின் கீழ், திருவள்ளூர், காஞ்சிபுரம். செங்கல்பட்டு உள்ளிட்ட 14 மாவட்டங்களில் 18 சிட்கோ தொழில்பேட்டைகள் தொடங்கப்பட்டுள்ளது உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

* இந்தியாவில் முதல் முறையாக உலகப் புத்தொழில் மாநாடு தமிழ்நாட்டில் நடத்தப்பட்டது. அது குறித்துக் கூறுங்கள்?

புத்தொழில் சூழலில் தேசிய அளவில் முன்னணி வகிக்கும் தமிழ்நாட்டினை உலகத்தரத்திற்கு உயர்த்த வேண்டும் என்ற நல்ல நோக்கில் உலகப் புத்தொழில் மாநாடு கோயமுத்தூரில் 2 நாட்கள் நடைபெற்றது. இந்த மாநாட்டினை முதல்வர் தொடங்கிவைத்தார். இந்தியாவில் முதல் முறையாக நடத்தப்பட்ட இந்த புத்தொழில் மாநாட்டில் 23 புரிந்துணர்வு ஒப்பந்தந்கள் கையெழுத்தாகின. 72 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள், இளைஞர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

இந்த மாநாட்டில் 115 முதலீட்டாளர்கள். 328 சர்வதேச பேச்சாளர்கள், 45 நாடுகளின் பிரதிநிதிகள் உட்பட 609 வல்லுநர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில் 21 வெளிநாட்டு அரங்குகள், 12 உலக முன்னனி நிறுவனங்கள், 750 தமிழ்நாட்டு புத்தொழில் நிறுவனங்களின் 1012 கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டன. இந்த மாநாட்டில் 453 புத்தொழில் நிறுவனங்கள் தங்களுக்கு 1012 கண்காட்சி தேவையான முதலீட்டினை ஈர்க்க 115 முதலீட்டாளர்களுடன் சந்திப்புகள் நடத்தின.

* தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் எவ்வளவு வீடுகள் கட்டப்பட்டுள்ளன?

அதிமுக ஆட்சியில் 2014- 2021 வரை 6 ஆண்டு காலத்தில் ரூ.2,438 கோடி மதிப்பில் 27,668 குடியிருப்புகள் மட்டுமே கட்டப்பட்டது. ஆனால், திமுக ஆட்சியில் ரூ.8,085 கோடி செலவில் 68,759 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்பட்டுள்ளது. அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்டுள்ள 96,427 அடுக்குமாடி குடியிருப்புகளில் கடந்த அதிமுக ஆட்சியில், 6,417 குடியிருப்புகள் மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், கழக ஆட்சியில் 4 ஆண்டுகளில் 62,378 அடுக்குமாடி குடியிருப்புகள் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ஏழை, எளிய மக்கள் அதிகம் வசிக்கும் வடசென்னை பகுதியை மேம்படுத்த முதல்வரால் அறிவிக்கப்பட்ட வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 601 கோடி மதிப்பில் 3,434 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் 200 சதுர அடிக்கும் சற்று அதிகாம அளவில்தான் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. ஆனால், இந்த ஆட்சியில் ஒரு குடும்பம் நிம்மதியாக வாழவேண்டும் என்ற அடிப்படையில், நவீன வசதியுடன் 420 சதுர அடியில் பால்கனியுடன் வீடுகள் தனியார் குடியிருப்புகளுக்கு இணையாகக் கட்டப்படுகிறது. மேலும், வாரியத்தால் கட்டப்படும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் புதிய தொழில்நுட்பங்களைச் செயல்படுத்துவதில் இந்திய அளவில் சிறந்த மாநிலமாகத் தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

* உங்களின் ஆலந்தூர் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் எவ்வளவு திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளீர்கள்?

கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ.1,800 கோடிக்கும் மேல் தொகுதி முழுவதும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொகுதி முழுவதும் சீரான வளர்ச்சி அடையும் வகையில் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளேன். அவற்றைப் பட்டியலிட்டால் நீணடதாக இருக்கும். இருந்தாலும் குறிப்பிடத்தக்க சில திட்டங்களைக் கூறுகிறேன்,

இந்தத் தொகுதியில் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கொண்டுவந்தேன். அதற்காக கத்திப்பாரா மேம்பாலம் அருகில் ரூ.22 கோடி மதிப்பில் கட்டிடமும் கட்டப்படவுள்ளது. ஆலந்தூர் – பரங்கிமலை பகுதிகளில் ரூ.1000 கோடி மதிப்பிலான அரசு நிலங்கள் மீட்கப்பட்டு அதில் ரூ. 13 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டில் தோழி விடுதி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.36 கோடி மதிப்பீட்டில் ஆலந்தூர் மண்டல அலுவலகம், ரூ.3 கோடி மதிப்பீட்டில் மினி ஸ்டேடியம், மின் துணை நிலையம் (SUB STATION) ஆகியவை அமைய உள்ளது.

நந்தம்பாக்கத்தில் ரூ.254 கோடி மதிப்பீட்டில் சர்வதேச தரத்திலான நிதிநுட்ப கோபுரம் மற்றும் ரூ.116 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 56 ஏக்கர் பரப்பளவில் நிதிநுட்ப நகரம் அமைக்கப்பட்டுள்ளது. ஆலந்தூர், அய்யப்பன்தாங்கல், மணப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சென்னை மெட்ரோ ரயில் திட்டம், பரங்கிமலை – வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தொகுதியில் உள்ள 24 இடங்களில் விளையாட்டு பூங்காக்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது. முகலிவாக்கம் மாதா நகரில் உள் விளையாட்டு அரங்கம் திறக்கப்பட்டுள்ளது.

தொகுதி முழுவதும் 15 இடங்களில் புதிய நியாய விலைக் கடைகள் மற்றும் 14 இடங்களில் புதிய அங்கன்வாடி மையங்கள் கட்டப்பட்டுள்ளது.
12 இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. 10 பேருந்து நிலையங்களில் பயனியர் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. தொகுதி முழுவதும் சீரான மின் விநியோகம் வழங்க 58 மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளது.

ஆலந்தூர் தொகுதி முழுவதும் இருந்த கிராம நத்தம் இடங்களுக்கும் சர்கார் மனை என இருந்ததையும் மாற்றி 5000 குடும்பங்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது தலக்கனான்சேரி, பழவந்தாங்கல், நங்கநல்லூர் பகுதியில் உள்ள சர்கார் மனைகளை மாற்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மேலும் 5000 குடும்பங்களுக்கு பட்டா கிடைக்கும்.

* மீண்டும் வெற்றி பெற்ற பிறகு என்ன மாதிரியான திட்டங்களைச் செயல்படுத்த உள்ளீர்கள்?

என்னுடைய தொகுதி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ளது. நான் வெற்றி பெற்றதும் ஆலந்தூர் பகுதில் உள்ள மின்கம்பிகளை பூமிக்கு அடியில் புதைக்கும் திட்டத்தைச் செயல்படுத்துவேன். மெட்ரோ தண்ணீர் வசதி இல்லாத பகுதிகளில் அதை ஏற்படுத்திக் கொடுப்பேன். போக்குவரத்து சிரமம் இல்லாமல் இருக்க சாலைகளை அகலப்படுத்துவேன்.

* அதிமுக பாஜக கூட்டணி இந்தத் தேர்தல் களத்தில் திமுகவுக்குப் போட்டியாக உள்ளார்களா?

அவர்கள் களத்தில் எங்களுக்கு இணையாக இல்லை. திமுக செய்த சாதனைகளை அவர்கள் செய்யவில்லை. அதிமுக தனியாக தேர்தலைச் சந்தித்தால் கூட 5 ஆயிரம் ஓட்டு அதிகமாக வாங்குவார்கள். ஆனால் பாஜகவுடன் சேர்ந்ததால் நிறையத் தொகுதிகளில் டெபாசிட் இழப்பார்கள்.

* நடிகர் விஜய் தவெகவுக்கும் திமுகவுக்கும் இடையில்தான் போட்டி எனச் சொல்வது குறித்து உங்களின் கருத்து என்ன?

அதிமுக பலவீனமாக உள்ளது; தமிழகத்தில் பல பகுதிகளில் பாஜ இல்லை; சில இடங்களில்தான் பாமக. ஆனால், திமுக கூட்டணி பலமாக உள்ளது. பெரிய கட்சியுடன் மோதினால்தான் மரியாதையாக இருக்கும் என எங்களுடன் போட்டி எனச் சொல்கிறார். அவர் நடிகர்; நாங்கள் எல்லாவற்றையும் பார்த்துவிட்டு வந்தவர்கள். இளைஞர் அணியில் கொடிகட்டி, போஸ்டர் ஒட்டி இந்த இடத்துக்கு வந்துள்ளோம்.

Tags : Minister ,Tha.Mo.Anparasan ,Micro, Small and Medium Enterprises Department ,Tamil Nadu Urban Habitat… ,
× RELATED விருதுநகர் பட்டாசு ஆலையில் மீண்டும் விபத்து: 8 பேர் காயம்