- நீதிபதி
- உச்ச நீதிமன்றம்
- மதுரை
- முதன்மை மாவட்ட நீதிமன்றம்
- கூடுதல் மாவட்ட நீதிமன்றம்
- குடும்ப நல நீதிமன்றம்
- பெண்கள் நீதிமன்றம்
- மதுரை-மேலூர் சாலை
மதுரை: மதுரை – மேலூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முதன்மை மாவட்ட நீதிமன்றம், கூடுதல் மாவட்ட நீதிமன்றம், குடும்ப நல நீதிமன்றம், மகளிர் நீதிமன்றம் உள்ளிட்ட 13 நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், நீதிமன்ற வளாகத்தில் புதிதாக கூடுதல் நீதிமன்றங்கள் கட்ட ரூ.166 கோடி நிதி ஒதுக்கி, இதற்கான அடிக்கல் நாட்டு விழா 2023, மார்ச் 25ல் நடந்தது. 31,488 சதுர அடியில் 19 நீதிமன்ற அறைகளுடன் 3 மாடி நீதிமன்றக் கட்டிடம் புதிதாக கட்டப்பட்டுள்ளது.
தரைத்தளத்தில் வாகனம் நிறுத்த, மேல் 3 மாடியில் நீதிமன்ற அறைகள், அலுவலகம், கைதிகள் காத்திருப்பு அறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, நீதிமன்றக் கட்டடங்கள் திறப்பு விழா நேற்று நடந்தது. புதிய கட்டிடங்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் திறந்து வைத்து பேசியதாவது: ஒரு பொதுமகன் நீதிமன்றத்தை அணுக முடியாத தூரத்தில் இருந்தால், அது உண்மையில் நீதியை மறுப்பதற்கு சமமானது.
பெரும்பாலான பொதுமக்களுக்கு முதலும் கடைசியுமானது நீதிமன்றம்தான். உயர்நீதிமன்றங்களும், உச்சநீதிமன்றமும் சட்டத்தை வடிவமைத்தாலும், அதன் உயிரோட்டத்தை வழங்குவது மாவட்ட நீதித்துறையே. நீதிமன்ற கட்டமைப்பில் முதலீடு செய்வது, வெறும் கட்டிடங்களை அமைப்பதற்காக அல்ல. அது விரைவான, மரியாதையான மற்றும் செயல்திறன் மிக்க நீதிநிர்வாகத்தை உருவாக்குவதற்கான அடித்தளமாகும். சிறப்பாக வடிவமைக்கப்பட்ட நீதிமன்றம் ஒழுங்கையும் திறமையையும் மேம்படுத்தி, நீதித்துறையின் கண்ணியத்தை உயர்த்தும்.
இந்த புதிய கட்டிடங்கள் தற்போதைய வசதிகளின் மீதுள்ள அழுத்தத்தை குறைத்து, தேவையற்ற வழக்கு ஒத்திவைப்புகளை தவிர்க்க உதவும். இதன் மூலம் பொதுமக்களின் நீதித்துறையின் மீதுள்ள நம்பிக்கை மேலும் வலுப்பெறும். சென்னை உயர்நீதிமன்றம், குறிப்பாக மதுரை கிளை, சிவில், குற்றவியல் மற்றும் அரசியலமைப்பு சட்டங்களில் சிறப்பான பங்களிப்பை வழங்கி முன்னணியில் உள்ளன.
நீதிபதிகளின் அர்ப்பணிப்பும், வழக்கறிஞர்களின் தொழில்முறை திறனும் இணைந்தாலே உயர்தரமான நீதி வழங்க முடியும். இவ்வாறு பேசினார். இந்நிகழ்வில் ஐகோர்ட் மதுரை கிளையின் கூடுதல் விருந்தினர் மாளிகையும் திறக்கப்பட்டது. விழாவிற்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தா்மாதிகாரி தலைமை வகித்தார்.
உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் வரவேற்றார். விழாவில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜெ.கே.மகேஸ்வரி, எம்.எம். சுந்தரேஷ், ஆர். மகாதேவன், உயர்நீதிமன்ற நீதிபதிகள், என்.சதீஷ்குமார், அனிதா சுமந்த், எஸ்.எம்.சுப்பிரமணியன், அரசு வழக்குரைஞர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இறுதியில், நீதிபதி பி.வேல்முருகன் நன்றி கூறினார்.
