- Amitsha
- மயிலாபூர், சென்னை
- சென்னை
- மத்திய உள்துறை அமைச்சர்
- கோவா
- தில்லி
- ஈரோடு மாவட்டம்
- Motakurichi
- கூட்டணி கட்சி
சென்னை: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். தொடர்ந்து அவர் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதி வேட்பாளர் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சுமார் ஒரு மணி நேரம் ரோடு ஷோ நடத்தினார். ஈரோடு பயணத்தை முடித்துக்கொண்டு அமித்ஷா நேற்று இரவு 6 மணிக்கு சென்னை மயிலாப்பூர் வந்தார்.
மயிலாப்பூர் வந்த அவர் நேராக கபாலீஸ்வரர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து அவர் மயிலாப்பூர் 4 மாட வீதிகளை சுற்றி ரோடு ஷோவில் ஈடுபட்டார். அப்போது அவர் மயிலாப்பூர் தொகுதி பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், வேளச்சேரி அதிமுக வேட்பாளர் அசோக், ஆயிரம் விளக்கு அதிமுக வேட்பாளர் வளர்மதி ஆகியோரை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.
திறந்த வேனில் சென்றவாறு அமித்ஷா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் திரண்டிருந்த மக்கள் மீது பூக்களை தூவினார். அவருடன் ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயலும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சுமார் 1 மணி நேரம் ரோடு ஷோ நடத்தினார். ரோடு ஷோவை முடித்து கொண்டு சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
அமித்ஷா மாலை 4.15 மணிக்கு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்வதாக இருந்தது. ஆனால், அவர் வந்ததே 6 மணிக்கு தான். தொடர்ந்து அவர் பிரசாரத்தில் ஈடுபட்டார். சுமார் 2 மணி நேரம் தாமதமாக வந்ததால் ரோடு ஷோவில் பங்கேற்க 2 மணி முதலே வரத் தொடங்கிய தொண்டர்கள் சோர்வடைந்தனர். தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து புறப்பட தொடங்கினர்.
இதனை பார்த்து அங்கிருந்த பாஜ நிர்வாகிகள் அவர்களை பேசி சமாதானப்படுத்தி இருக்க வைத்தனர். உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்ததையொட்டி சென்னை விமான நிலையம் முதல் மயிலாப்பூர் வரை சாலையின் இருபுறமும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சென்னை மயிலாப்பூருக்குள் நேற்று காலை முதல் நுழைபவர்கள் கடும் சோதனைக்கு பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
சென்னை மயிலாப்பூர் திருவள்ளுவர் சிலையில் இருந்து கச்சேரி சாலை செல்லும் பாதை காலையில் இருந்தே மூடப்பட்டது. மேலும் ஆர்.கே.மடம் சாலை பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது. வாகன ஓட்டிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டது.
இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதே போல மயிலாப்பூர் தெப்பக்குளம் பகுதியிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இந்த மாற்றம் அமித்ஷா வந்து செல்லும் வரை அமலில் இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
