வலுவான கதை இல்லாமல் படம் இயக்க மாட்டேன்: நூறு சாமி பற்றி சசி

சென்னை: ‘சொல்லாமலே’, ‘ரோஜாக் கூட்டம்’, ‘பூ’, ‘சிவப்பு மஞ்சள் பச்சை’, ‘பிச்சைக்காரன்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியவர் சசி. அடுத்ததாக விஜய் ஆண்டனி, சுவாசிகா நடிப்பில் ‘நூறு சாமி’ படத்தை இயக்கியுள்ளார். இப்படம் ஜூன் 19ம் தேதி ரிலீசாகிறது. படம் குறித்து சசி கூறியதாவது: ஒருமுறை ஒரு செய்தி பார்த்துக்கொண்டிருந்தேன். சிங்கிள் மதர் பற்றிய செய்து அது. கள்ளக்குறிச்சி அருகே நடந்த சம்பவம். அந்த செய்தியை வீடியோவாக பார்த்ததும் நெஞ்சை உலுக்கிப்போட்டது. சம்பந்தப்பட்டவர்களிடம் அது பற்றி பேசினேன். அந்த கதைதான் நூறு சாமி. தாயை கடவுளாக நினைப்பதெல்லாம் இருக்கட்டும். முதலில் அவரை ஒரு மனுஷியாக மதியுங்கள் என்ற கருத்துதான் இந்தப் படம் சொல்கிறது. அந்த தாய் வேடத்தில் சுவாசிகா நடிக்கிறார். அவருக்கு 2 ஆண் பிள்ளைகள். லப்பர் பந்து படம் பார்த்ததும் இந்த கதைக்கு இவர்தான் பொருத்தமாக இருப்பார் என தீர்மானித்தேன். இப்போது படம் பார்த்த பிறகு நடிப்பில் சாவித்ரிக்கு பிறகு சுவாசிகாதான் என உறுதியாக சொல்வேன்.

கிராமத்தில் அப்பாவி குணத்துடன் நிறைய பேர் இருப்பார்கள். அதே சமயம், அந்த குணத்துடன் மிகவும் புத்திசாலியாகவும் இருப்பார்கள். அப்படியொரு கேரக்டரில் விஜய் ஆண்டனி நடிக்கிறார். ஒவ்வொரு படத்துக்கு நீண்ட இடைவெளி எடுக்க காரணம், கதைதான். கதை வலுவாக அமையாத வரை நான் அந்த படத்தை எடுக்க ஆயத்தமாக மாட்டேன். ‘பூ’ படத்தில் இருந்த எமோஷனும் ‘பிச்சைக்காரன்’ படத்தில் இருந்த கமர்ஷியல் அம்சங்களும் கலந்த படமாக ‘நூறு சாமி’ இருக்கும். இவ்வாறு சசி கூறினார்.

Related Stories: