சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள அடையார் ஆனந்தபவன் ஊழியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, கடைக்கு சீல் வைக்கப்பட்டது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் 50க்கும் மேற்பட்ட ரயில்கள் தினசரி இயக்கப்படுகிறது. 50 ஆயிரத்துக்கும் மேலான பயணிகள் தினசரி வந்து செல்கின்றனர். இங்கு, பயணிகளுக்கு தேவையான சாப்பாடு, டீ, காபி, தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்வதற்கு 20க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. மேலும், ரயில் நிலையத்தில் அடையார் ஆனந்தபவன் ஓட்டலும் அமைந்துள்ளது. அந்த ஓட்டலில் பணிபுரியும் பீகார் மாநிலத்தை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க ஊழியர் ஒருவருக்கு கடந்த 2 நாட்களாக காய்ச்சல், சளி, இருமல் இருந்ததையடுத்து, அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.இந்த சோதனையின் முடிவு நேற்று முன்தினம் வந்தது. அதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக ராஜிவ்காந்தி அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த ஓட்டலில் இருந்து மற்ற ஊழியர்கள் மற்றும் பயணிகளுக்கு தொற்று பரவுவதை தடுக்க, அந்த ஓட்டலை சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் சீல் வைத்தனர். மேலும், கடையில் உள்ள அனைத்து ஊழியர்களும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். அதன்படி நேற்று அனைத்து ஊழியர்களும் கொரோனா சோதனை செய்துள்ளனர். பரிசோதனை முடிவுக்கு பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும், என அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல், மற்றொரு கடையில் பணிபுரிந்த ஊழியருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது….
The post சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள அடையார் ஆனந்தபவன் ஊழியருக்கு கொரோனா: கடைக்கு சுகாதாரத்துறையினர் சீல்; சக ஊழியர்களுக்கும் பரிசோதனை appeared first on Dinakaran.