சென்னை: அழகர் பிக்சர்ஸ் சார்பில் புதுகை ஏ.பழனிச்சாமி தயாரிக்க, சங்கிலி சிபிஏ எழுதி இயக்கியுள்ள படம், ‘வடமஞ்சுவிரட்டு’. இதில் ‘முருகா’ அசோக், யாழினி முருகன், பக்கோடா பாண்டி, நமோ நாராயணன் நடித்துள்ளனர். ஈஸ்வரன் கார்த்திகேயன் ஒளிப்பதிவு செய்ய, முகேஷ் முனுசாமி இசை அமைத்துள்ளார். இதன் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழாவில் ஸ்டண்ட் இயக்குனர் மிரட்டல் செல்வா, தயாரிப்பாளர் சங்க நிர்வாக குழு உறுப்பினர் ராஜா, யாழினி முருகன், சம்பத் ராம், சாய் கோபி, சிறுபட தயாரிப்பாளர் சங்க தலைவர் அன்புச்செல்வன், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க செயலாளர் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, அசோக் கலந்துகொண்டனர்.
அப்போது சங்கிலி சிபிஏ பேசியதாவது: இக்கதையை விமல், கலையரசன், தர்ஷன், விக்ராந்த் உள்பட சில ஹீரோக்களிடம் சொன்னேன். அனைவரும் தேதியில்லை என்று சொன்னார்கள். அது உண்மையான காரணம் இல்லை. இதில் காளை மாட்டுடன் நடிக்க வேண்டும் என்று அந்த ஹீரோக்கள் பயந்தனர். அசோக் மட்டுமே துணிச்சலாக காளை மாட்டுடன் நடித்தார். யாழினியின் போட்டோவை பார்த்துவிட்டு நாங்கள் அவரை தேர்வு செய்யவில்லை.
ஆனால், காளையுடன் நடிக்க வேண்டும் என்று சொன்னபோது பல நடிகைகள் பயந்து ஓடினார்கள். ஆனால், யாழினி மட்டும் அந்த மாட்டுடன் நடிக்கிறேன் என்று தைரியமாக முன்வந்தார். இப்படித்தான் யாழினி படத்துக்குள் வந்தார். முகேஷ் முனுசாமி தனக்கு கிராமத்து இசை தெரியாது என்றார். உடனே அவரை 300 கி.மீ தூரம் அழைத்துச் சென்று, நிஜமான கிராமம் எது என்று உணர வைத்த பிறகு அற்புதமாக இசை அமைத்தார்.
