பிரேக்பாஸ்ட் விமர்சனம்…

தொழிலதிபர் சம்பத் ராஜின் மகள் ரோஸ்மின், என்ஜினீயரிங் முடித்துவிட்டு குப்பை அள்ளும் ராணவ்விற்கு தனது கம்பெனியில் வேலை கொடுக்கிறார். நாளடைவில் அவர்கள் காதலிக்க, அதற்கு சம்பத் ராஜ் எதிர்ப்பு தெரிவிக்கிறார். தந்தையை மீறி ராணவ்வை திருமணம் செய்யும் ரோஸ்மின், தனது கம்பெனி எம்.டியாக ராணவ்வை நியமிக்கிறார். இந்நிலையில், அவர்களின் மணமும், மனமும் முறிந்து குடும்ப வாழ்க்கையில் விரிசல் ஏற்படுகிறது.

அதற்கு என்ன காரணம்? காதலிக்கும்போது இருந்த ‘காதல்’, திருமணத்துக்கு பிறகு எங்கே போனது? மீண்டும் இணைந்தார்களா என்பது மீதி கதை. இயல்பாக நடித்துள்ள ராணவ், தனது பெற்றோரை சரியாக கவனித்துக்கொள்ள முடியாமல் கலங்கும்போது உருக வைக்கிறார். மலையாள வரவு ரோஸ்மின், அழுத்தமான கேரக்டரில் சிறப்பாக நடித்துள்ளார். ராணவ்வுடன் நெருக்கமாக நடித்து சூடேற்றுகிறார்.

மற்றொரு ஜோடி கிரித்திக் மோகன், அமிதா ரங்கநாத் அந்த கேரக்டராகவே வாழ்ந்துள்ளனர். சம்பத் ராஜ், மனநல மருத்துவர் கஸ்தூரி, பெற்றோராக அர்ச்சனா, சி.ரங்கநாதன் ஆகியோர், தங்கள் அனுபவ நடிப்பை வழங்கியுள்ளனர். எம்.வி.பன்னீர்செல்வத்தின் ஒளிப்பதிவு கண்களுக்கு இதமாக இருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் குமாரின் பாடல்களும், பின்னணி இசையும் கதையை நகர்த்த உதவியுள்ளன.

சோஷியல் மீடியாவின் தாக்கம் நிறைந்த உலகில், உடனே காதல், உடனே திருமணம், உடனே பிரிவு என்பதற்கான காரணத்தை அலசிய இயக்குனர் ஏ.ஆர்.காந்தி கிருஷ்ணா, வழக்கமான ஃபேமிலி பேக்கிரவுண்டிலேயே சொல்லியிருக்கிறார். காதலித்து திருமணம் செய்தவர்கள் தங்களையும், பெற்றோர்களையும் எப்படி பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று சொன்னதற்காக இயக்குனரை பாராட்டலாம்.

Related Stories: