மகான்கள் காட்டிய மகத்தான பாதை

* ஆதிசங்கரர்

கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதிசங்கரர், அத்வைத வேதாந்தத்தை உலகிற்கு தெளிவாக விளக்கினார். பாரதம் முழுவதும் பாதயாத்திரை செய்து, பாமர மக்களுக்கும் ஆண்டவனை அடைய வழிவகை செய்தவர். மேலும், சிருங்கேரி, துவாரகை, பத்ரிநாத், பூரி ஆகிய நான்கு பீடங்களை நிறுவிய பெருமை, இவரையே சாரும்.

* ஸ்ரீ ராமானுஜர்

வைணவ சமயத்தின் தலைசிறந்த ஆச்சாரியரான ஸ்ரீ ராமானுஜர், விசிஷ்டாத்வைத தத்துவத்தை நிலைநாட்டினார். சாதி பேதம் பாராமல் அனைவருக்கும் இறையருளைப் பெறும் உரிமை உண்டு என்பதை வலியுறுத்தினார். திருக்கோஷ்டியூரில் ரகசிய மந்திரத்தை மக்களுக்காக வெளிப்படுத்திய கருணைமிகு குருவாக போற்றப்படுகிறார்.

* ஸ்ரீ மத்வாச்சாரியர்

துவைத வேதாந்தத்தின் நிறுவனர், ஸ்ரீ மத்வாச்சாரியர். ஜீவனும் பரமாத்மாவும் வேறுபட்டவை என்பதை வேத ஆதாரங்களுடன் விளக்கினார். உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலை பிரதிஷ்டை செய்ததும் மத்வரே!

* ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள்

மந்திராலயத்தில் ஜீவசமாதி அடைந்த ராகவேந்திரர், இன்றும் பக்தர்களின் வேண்டுதல்களுக்கு அருள் புரிகிறார். வேதம், சாஸ்திரம், பக்தி ஆகியவற்றில் சிறந்து விளங்கிய மகான். “குரு ராகவேந்திராய நம:’’ என்ற நாமம் கோடிக் கணக்கானோரால் இன்றும் தொடர்ந்து ஜபிக்கப்படுகிறது.

* ஸ்ரீ ரமண மகரிஷி

திருவண்ணாமலையில் வாழ்ந்த ரமண மகரிஷி, “நான் யார்?’’ என்ற ஆத்ம விசாரத்தை உலகம் முழுவதும் பரப்பினார். மௌனமே உயர்ந்த உபதேசம் என்று வாழ்ந்து காட்டிய ஞானி. வெளிநாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் இவரைத் தரிசித்தனர்.

* ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்

காளி அன்னையின் பரம பக்தரான இவர், எல்லா மதங்களும் ஒரே பரம்பொருளை அடைகின்றன என்பதை அனுபவத்தின் மூலம் உணர்த்தினார். சுவாமி விவேகானந்தர் உள்ளிட்ட பல சீடர்களை உருவாக்கிய ஆன்மிக குரு.

* ஸ்ரீ அரவிந்தர்

விடுதலைப் போராட்ட வீரராக இருந்து, பின்னர் ஆன்மிக யோகியாக உயர்ந்தவர். மனிதன் தெய்வீக நிலையை நோக்கி பரிணமிக்க வேண்டும் என்ற “ஒருங்கிணைந்த யோகம்’’ (Integral Yoga) கொள்கையை உலகிற்கு வழங்கினார்.

* சீரடி சாய்பாபா

“ஸ்ரத்தா’’ (நம்பிக்கை), “சபூரி’’ (பொறுமை) ஆகிய இரண்டையும் வாழ்க்கையின் அடிப்படையாக போதித்தார். மதவேறுபாடின்றி அனைவரையும் சமமாக நேசித்தார். சீரடி இன்று உலகப் புகழ்பெற்ற ஆன்மிகத் தலமாக உள்ளது.

* கபீர்தாசர்

இவரும் மக்களின் ஒற்றுமையைப் போதித்த ஞானக் கவிஞர். வெளிப்புற சடங்குகளைவிட, மனத் தூய்மையே முக்கியம் என்று வலியுறுத்தினார். அவரது தோகாக்கள் (தோகாக்கள் (Dohas) என்பது இந்தி இலக்கியத்தில் மிகவும் பிரபலமான, இரண்டு வரிகளைக் கொண்ட ஒரு பாரம்பரிய கவிதை வடிவமாகும்) இன்றும் ஆன்மிக இலக்கியத்தில் சிறப்பிடம் பெறுகின்றன.

* துளசிதாசர்

வடஇந்திய மக்களுக்கு ஸ்ரீ ராம பக்தியை எளிய மொழியில் எடுத்துச் சென்றவர். `ராம்சரித்மானஸ்’ என்ற காவியம் இந்திய இலக்கியத்தின் சிறந்த படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

* துகாராம்

விட்டல பக்தியில் மூழ்கிய மகாராஷ்டிரத்தின் பெரும் துறவர். அவரது அபயங்கங்கள் எளிய மொழியில் உயர்ந்த பக்தித் தத்துவத்தை எடுத்துரைக்கின்றன. நாமசங்கீர்த்தனமே இறைவனை அடையும் எளிய வழி என்று போதித்தார்.

* சைதன்ய மகாபிரபு

ஹரே கிருஷ்ண நாமசங்கீர்த்தனத்தை மக்களிடையே பெருமளவில் பரப்பியவர். கிருஷ்ண பக்தியை பாடல், இசை, நடனம், மூலம் மக்களிடம் கொண்டு சென்றவர்.

Related Stories: