திருக்கோளூர் பெண்

திருக்கோளூர் பெண்

108 திவ்விய திருத்தலங்களில் ஒன்றான திருக்கோளூர், மதுரகவியாழ்வார் அவதரித்த தலம். பாண்டி நாட்டு திவ்ய தேசங்களில் ஒன்று. நம்மாழ்வார், ‘‘திண்ணம் என் இளமான் புகும் ஊர் திருக்கோளூரே’’ என்று பாசுரம் பாடி இருக்கிறார். ஒருவருடைய வாழ்வு உயர திருக்கோளூர் திருத்தலம் செல்ல வேண்டும் என்பது அதன் பொருள். அங்குள்ள பெருமாளுக்கு வைத்தமாநிதி பெருமாள் என்ற திருநாமம். குபேரன் தன் செல்வத்தை திரும்பப் பெற்ற இடம். ராமானுஜர் இந்தத் திருத்தலத்தில்தான் ஓர் அற்புதமான ஞான விஷயத்தை இந்த உலகம் பெறுவதற்குக் காரணமான பெண்ணைச் சந்தித்தார். திருக்கோளூரைச் சேர்ந்த பெண் என்பதால் அவளுக்கு திருக்கோளூர் பெண் என்றே பெயர் வைத்தனர்.

திருக்கோளூர் விட்டு ஏன் போகிறாய்?

நம்மாழ்வாரால் அருளிச் செய்யப் பெற்ற திருக்கோளுர் திவ்ய தேசத்திற்கு எம்பெருமானார் திருநகரியிலிருந்து எழுந்தருளினார். ஊருக்கு சற்றுத் தொலைவில் அவர் வந்த போது, ஒரு பெண்மணி ஊரைவிட்டு வெளியே செல்வதைப் பார்த்தார். அங்கு வசிப்பது பெரும்பாக்கியம் என்று பலரும் கருதும் போது, இந்தப் பெண் மட்டும் ஏன் ஊரைவிட்டு வெளியே செல்கிறாள்? என்று ராமானுஜருக்கு ஆச்சரியம். அப்பெண்ணிடம். அவள் ஊரை விட்டு வெளியே செல்வதற்கானக் காரணத்தைக் கேட்டார் அதற்கு அந்தப் பெண், ‘‘சுவாமி, முயற்புழுக்கை வரப்பில் இருந்தால் என்ன?

வயலில் இருந்தால் என்ன? ஞானமற்ற நான் எங்கிருந்தால் என்ன’’ என்றாள் விரக்தியுடன். அதைக் கேட்ட ராமானுஜர், ‘‘அம்மா, உனக்குக் குறைதான் என்ன?’’ என்று விசாரித்தார். “ஒன்றா, இரண்டா….?’’ என்று ஏக்கத்துடன் கேட்ட அந்த ஞானப் பெண்,81 வைணவப் பெரியார்களின் வைணவ குணங்களைப் பட்டியலிட்டு கூறி, அந்த வைணவ நலன்கள் ஒன்றுகூடத் தனக்கு வாய்க்கவில்லையே,’’ என்று வருந்திக் கூறினாள். எளிமையான ஆன்மிகத் தத்துவத்தை எண்பத்தொரு வார்த்தைகளில் இந்த உலகத்திற்கு அளித்தார்.

விரித்துரைக்கும் பல மறைபொருள் அடங்கிய அந்த நூலே “திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம்”. வைணவத்தின் அத்தனை தத்துவங்களும் ஒவ்வொரு சம்பவமாக ஒவ்வொரு வரியாக விவரிக்கப்பட்டிருக்கும். அந்த நூலைக் கற்றறிந்தவர் வைணவத் தத்துவத்தை முழுமையாக தெரிந்துகொள்ள முடியும். ராமானுஜர் காலத்தில் ஞானம் செறிந்த பெண் மக்கள் பலர் இருந்தனர் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு திருக்கோளூர் பெண் பிள்ளை.

பொன்னாச்சியார்

‘‘புரட்டிக் கொடுத்தேனோ பொன்னாச்சி போலே’’ என்பது ஒரு வைணவ வாசகம். பொன்னாச்சி பேரழகி. ராமானுஜரின் சீடரான பிள்ளை உறங்காவில்லிதாசரின் மனைவி. மனைவியின் கண்ணழகில் ஈடுபட்டு நடை பாவாடை விரித்து குடை பிடித்துச் சென்ற உறையூர் மல்லனை, மடைமாற்றம் செய்து, அரங்கனிடமும், அரங்கன் அடியார்களிடமும் ஈடுபாடுகொள்ள வைத்தார் ராமானுஜர். அதிலும் குறிப்பாக பொன்னாச் சியாரின் வைணவ வாழ்க்கை நெறி பிறருக்கு எடுத்துக்காட்டாக அற் புதமாக அமைந்தது. எம்பெருமானார் அவரை அரங்கனிடம் ஆற்றுப்படுத்திய பிறகு, சோழ ராஜனிடம் செய்து வந்த சேவையை விட்டு, அரங்கன் மேல் பக்தியும் அன்பும் கொண்டு கையில் வாளேந்தி பெருமாளின் விக்கிரகத்திற்குப் பாதுகாவலாய் செல்லத் தொடங்கினார்.

காதணிகளை கழட்டிக் கொடுத்தவர்

வைணவ அடியார்களின் மீது அவர் கொண்ட பற்று அளப்பரியது. இதை நிரூபிக்க சில வைணவ அடியார்களை அனுப்பி அவருடைய காதணிகளை கழட்டச் சொன்னபோது, அவர்கள் அணிகலன்களை எடுப்பது தெரிந்தும், வைணவர்கள் எடுத்துக்கொள்ளட்டும், என்று அசையாமல் இருந்தவர். அவர்களைக் காட்டிக் கொடுக்காமல் இருந்தவர். ஞானத்தின் வல்லவர்.

Related Stories: