குதிரை பேர வழக்கில் கைதான 2 பேருக்கு ஜாமீன்: உயர் நீதிமன்றம் உத்தரவு

 

சென்னை: தவெக எம்.எல்.ஏ.,விடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சேதுராஜ் மற்றும் நரேஷ் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க 35 கோடி ரூபாய் சன்மானம் தருவதாக சிலர் தன்னிடம் பேசியதாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ. இளையராஜா, சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், திருவல்லிக்கேணி காவல்துறையினர் இதுவரை 14 பேரை கைது செய்துள்ளனர். இவர்களில் சேதுராஜ் மற்றும் நரேஷ் ஆகியோர் தங்களுக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் சேதுராஜ் இரண்டாவது எதிரியாக சேர்க்கப்பட்டுள்ளார். முக்கிய சதியில் அவர் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. அவர் தனது மனைவி மற்றும் ஓட்டுனர் மூலம் ஐந்து கோடி ரூபாய் கொடுத்துள்ளார். அதை கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் இணைந்து சேதுராஜ் சதி செய்துள்ளார் என்றார். இந்த வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதி, வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சேதுராஜ் மற்றும் நரேஷ் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

* காவல் நிலையத்தில் ஆஜராக விலக்கு கோரிய செந்தில் பாலாஜி மனு வாபஸ்

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியதையடுத்து, சனிக்கிழமை முதல் திருவல்லிகேணி போலீசார் முன்பு செந்தில் பாலாஜி ஆஜராகி வருகிறார். இந்நிலையில் காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரிய செந்தில் பாலாஜியின் மனு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுவை திரும்ப பெறுவதாக செந்தில் பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி மனுவை திரும்ப பெற அனுமதி அளித்தார்.

Related Stories: