வழக்கு தொடர அனுமதி அளிக்கும் விஷயத்தில் குற்றம்சாட்டப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கும் சிறப்பு சலுகை ஏன்?: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி: இந்த நடைமுறையை நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தல்

 

சென்னை: வழக்கு தொடர அனுமதியளிக்கும் விஷயத்தில் குற்றம் சாட்டப்பட்ட இரு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் விளக்கங்களை கேட்டது ஏன் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான 98 கோடி ரூபாய் டெண்டர் முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கந்தசாமி, விஜய கார்த்திகேயன் ஆகிய இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதியளிப்பது தொடர்பாக கடந்த பிப்ரவரி 27ம் தேதி விளக்கம் அளித்து பொதுத்துறை செயலாளருக்கு லஞ்ச ஒழிப்புத் துறை கடிதம் அனுப்பியிருந்தது.

கடந்த ஐந்து மாதங்களாக பொதுத்துறை செயலாளரிடம் இந்த கோப்புகள் நிலுவையில் வைத்தது ஏன் என்று அப்போதைய மற்றும் தற்போதைய பொதுத்துறை செயலாளர்கள் விளக்கமளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதுதொடர்பான வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தாமதத்துக்கான காரணத்தை விளக்கி, பொதுத்துறை முன்னாள் செயலாளர் ரீட்டா ஹரிஷ் தாக்கர், தற்போதைய செயலாளர் சுந்தரவல்லி ஆகியோர் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி வழங்குவது தொடர்பான கோப்புகள் ஜூலை 22ம் தேதி ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதைக்கேட்ட நீதிபதி, வழக்கு தொடர அனுமதியளிக்கும் விஷயத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டது ஏன்?. இதுபோன்ற நடைமுறை இதுவரை கேள்விப்பட்டதில்லை. ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு மட்டும் இந்த சிறப்பு சலுகை ஏன்?. இந்த நடைமுறையை நிறுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி விசாரணையை ஆகஸ்ட் 24ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

 

Related Stories: