பழநி ரூ.100 கோடி சொத்து முறைகேடு விவகாரம்; பத்திரப்பதிவு மதுரை டிஐஜியை பணிநீக்கம் செய்ய வேண்டும்: வடமதுரையில் பிளக்ஸ் பேனரால் பரபரப்பு

 

வடமதுரை: ரூ.100 கோடி நில முறைகேடு விவகாரம் தொடர்பாக மதுரை மண்டல டிஐஜி ஆனந்த்தை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை சார்பதிவாளர் அலுவலகம் முன்பு அக்கப்போர் இயக்கம் சார்பில் நேற்று, தமிழக அரசையும், பத்திரப்பதிவு துறையையும் கண்டித்து பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டிருந்தது.

அதில் தெரிவித்திருந்தாவது:2026 சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பு மதுரை மண்டல பத்திரப்பதிவு டிஐஜி ஆனந்த் பொறுப்பு சார்பதிவாளர்களை நியமித்தது தொடர்பாக விசாரணை செய்ய உத்தரவிட வேண்டும். பழநி கோயில் சொத்துக்களை மோசடியாக பத்திரப்பதிவு செய்த பின்பு டிஐஜி ஆனந்த், வாய்மொழி உத்தரவின்பேரில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகத்திலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பணியாளர்கள் பணி செய்வதன் நோக்கம், பணி சுமை கொடுக்கப்பட்டதன் நோக்கம் என்ன என்பதை விசாரணை செய்ய உத்தரவிட வேண்டும்.

பழநி கோயில் சொத்துக்களை மோசடியாக பத்திரப்பதிவு செய்த பின்பு வடமதுரை சார்பதிவாளர் அலுவலகத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 20க்கும் மேற்பட்ட வெளியாட்கள் பணியாற்றிய விபரம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது. இதுகுறித்து பொதுமக்கள் கேள்வி கேட்டதும் இதுவும் டிஐஜி ஆனந்தின் வாய்மொழி உத்தரவு என்பது குறித்து விசாரணை செய்ய வேண்டும். நிறைவாக பழநி கோயில் சொத்துக்களை மோசடியாக பத்திரப்பதிவு செய்ய நேரடியாகவும், மறைமுகமாகவும் செயல்பட்ட டிஐஜி ஆனந்த்தை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும், அவரது அனைத்து மாறுதல் உத்தரவுகளையும் விசாரணை செய்து ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு தெரிவித்திருந்தனர்.

* மேலும் ஒரு சார்பதிவாளர் இளநிலை ஊழியர் சஸ்பெண்ட்

பழநி கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பாக துறை நடவடிக்கையாக ஜஸ்டின் மணிகண்டன், மாவட்ட பதிவாளர் சசிகலா சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இவ்விவகாரம் தொடர்பாக பத்திரப்பதிவு துறை உயர்மட்ட குழுவினர் ஜஸ்டின் மணிகண்டன் சார்பதிவாளராக பணிபுரிந்த ஒட்டன்சத்திரம், வடமதுரை, கொடைக்கானல் மற்றும் நிலம் முறைகேடாக பதியப்பட்ட பழநி உள்ளிட்ட சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு சென்று ஆவணங்களை ஆய்வு செய்தனர்.

இதன் அடிப்படையில் ஜூலை 3ம் தேதி பழநி அலுவகத்தில் பொறுப்பில் இருந்த சார்பதிவாளர் பாலசுந்தர், இளநிலை உதவியாளர் சிவகங்கரி ஆகியோரை நேற்று சஸ்பெண்ட் செய்து பதிவுத்துறை உயரதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனிடையே தேனியில் ஜஸ்டின் மணிகண்டன் சார்பதிவாளராக இருந்தபோது, முறைகேடாக பத்திரப்பதிவு செய்தது ெதாடர்பாக அவர் உள்பட 20க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை தேனி மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி சிபிசிஐடி போலீசாரிடம் சமர்ப்பித்தார்.

Related Stories: