கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு-அணைகள் திறப்பு கேரளத்தில் பலி எண்ணிக்கை 12ஆக உயர்வு: மாயமான 5 பேரை தேடும் பணி தீவிரம்

திருவனந்தபுரம்: கேரளத்தில் கடந்த 2 தினங்களாக பெய்த பலத்த மழையில் 4 சிறுவர்கள் உள்பட 12 பேர் உயிரிழந்தனர். 5 பேரை காணவில்லை. வரும் 6ம் தேதி வரை மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கேரளத்தில் சில வாரங்களாக ஓய்ந்திருந்த தென்மேற்கு பருவமழை தற்போது மீண்டும் தீவிரமடைந்துள்ளது. கடந்த சில தினங்களாக மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய வட மாவட்டங்களில் தொடர்ந்து மிக பலத்த மழை பெய்தது.

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் இடுக்கி, கோட்டயம், பத்தனம்திட்டா மற்றும் திருச்சூர் ஆகிய மாவட்டங்களில் பேய் மழை பெய்தது. தொடர் மழையால் இடுக்கி, கோட்டயம் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பல வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 4 சிறுவர்கள் உள்பட 9 பேர் பலியானார்கள். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும், கடலில் விழுந்தும் 8 பேர் காணாமல் போனார்கள்.

இதில் 3 பேரின் உடல்கள் நேற்று கிடைத்தன. இதையடுத்து கடந்த 2 நாட்களில் மழைக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது. கனமழையால் இடுக்கி, கோட்டயம் மற்றும் பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களில்தான் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இங்குள்ள பெரும்பாலான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது.

பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ரான்னி, கோட்டயம் மாவட்டம் பாலா மற்றும் குருவாயூர் ஆகிய பகுதிகள் முழுவதும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. பத்தனம்திட்டா மாவட்டம் வடசேரிக்கரையில் தான் மிக அதிகமாக 24 மணிநேரத்தில் 36.1 செமீ மழை பெய்தது. வாகமண்ணில் 31.43 செமீ மழை பெய்தது. நேற்று மழையின் தீவிரம் சற்று குறைந்து காணப்பட்டது. கேரளத்தில் அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இடுக்கி மாவட்டம் கல்லார், திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள நெய்யார், அருவிக்கரை, பேப்பாறை உள்பட ஏராளமான அணைகள் திறக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே வரும் 6ம் தேதி வரை மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

* இடுக்கி மாவட்டத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வர வேண்டாம்
இடுக்கி மாவட்டத்தில் மூணாறு உள்பட ஏராளமான சுற்றுலாத்தலங்கள் உள்ளன. இங்கு தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் செல்வது வழக்கமாகும். இந்நிலையில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் சிவப்பு மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை வாபஸ் பெறப்படும் வரை சுற்றுலாப் பயணிகள் யாரும் வரவேண்டாம் என்று இடுக்கி மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

* வெள்ளத்தில் சிக்கி கோவை பெண் ஐ.டி. ஊழியர் பலி
கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ளது கிழக்கஞ்சேரி. இங்குள்ள பாலக்குழி நீர்வீழ்ச்சி வனப்பகுதியில் அமைந்துள்ளது. வனத்துறை அனுமதியின்றி நீர்வீழ்ச்சியை காண செல்ல முடியாது. தற்போது பெய்து வரும் கனமழையால் பாலக்குழி அருவியில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ரம்மியாமாக கொட்டுகிறது. நேற்று விடுமுறை நாள் என்பதால் கோவையில் உள்ள ஐ.டி. நிறுவன ஊழியர்கள் 2 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் இங்கு சுற்றுலா வந்தனர். அந்த அருவியில் குளித்த அவர்கள், அருவிக்கு மேலே சென்று அங்கும் குளித்து கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் பானுபிரியா (34), பரத் ஆகியோர் வெள்ளப்பெருக்கில் இழுத்துச் செல்லப்பட்டனர். தகவல் அறிந்ததும் வடக்கஞ்சேரி வனத்துறையினர்,போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.250 அடி பள்ளத்தில் கயிறு கட்டி 2 பேரையும் மீட்டனர். இதில் பானுபிரியா உயிரிழந்தது தெரியவந்தது. பரத் சிறு,சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

Related Stories: