புதுடெல்லி: ஜூலை மாதத்தில் இயல்பை விட குறைவான அளவு மழை பெய்ததால் நாட்டில் பெட்ரோல்,டீசல் விற்பனை அதிகரித்துள்ளது தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில்(ஐஓசி), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்(பிபிசிஎல்), இந்துஸ்தான் பெட்ரோலியம்(எச்பிசி) ஆகியவற்றில் பெட்ரோல் விற்பனை கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 31.4 லட்சம் டன்களாக இருந்த நிலையில், ஜூலையில் 9.7 சதவீதம் அதிகரித்து 34.5 லட்சம் டன்களாக உயர்ந்தது.
இருப்பினும், ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், பெட்ரோல் விற்பனை 34.8 லட்சம் டன்களில் இருந்து 1.1 சதவீதம் குறைந்துள்ளது. நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளின் முக்கிய குறியீடான டீசல் விற்பனை, முந்தைய ஆண்டு 64.3 லட்சம் டன்களாக இருந்த நிலையில், ஜூலை மாதத்தில் ஆண்டுக்கு ஆண்டு 10.7 சதவீதம் அதிகரித்து 71.2 லட்சம் டன்களாக உயர்ந்தது.
பருவமழை தொடங்கும் போது எரிபொருள் விற்பனை குறையும். இதனால், விவசாயப் பாசனப் பம்புகளை இயக்குவதற்கான தேவை குறைவதோடு, வாகனப் போக்குவரத்தும் மெதுவாகும். ஆனால் இந்த ஆண்டு, பருவமழை தாமதமாகப் பெய்ததால், விவசாயிகள் தங்கள் வயல்களுக்குப் பாசனம் செய்ய பம்புகளை இயக்க டீசலை பயன்படுத்தினர்.
அதே நேரத்தில், எல்பிஜி விற்பனை தொடர்ந்து சரிந்து 17.4 சதவீதம் குறைந்து 23 லட்சத்து 70,000 டன்களாக ஆனது. மேற்கு ஆசிய மோதலுக்குப் பிறகு, பலர் குழாய்வழி இயற்கை எரிவாயுவுக்கு மாறியதே இதற்கு முக்கியக் காரணம் என்று தொழில்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேற்கு ஆசிய மோதலால் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டதிலிருந்து எல்பிஜி விற்பனை சரிந்து வருகிறது.
