பனாஜி: கோவாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலையொட்டி காங்கிரஸ், கோவா ஃபார்வர்ட் கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தது. 40 உறுப்பினர்களை கொண்ட கோவா சட்டப்பேரவைக்கு கடந்த 2022ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ், கோவா ஃபார்வர்ட் கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. இதில் 40க்கு 20 இடங்களில் வென்ற பாஜ, பின்னர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 8 பேரை தன் பக்கம் இழுத்து கொண்டது.
அத்துடன் 3 சுயேச்சைகள் மற்றும் மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியை சேர்ந்த 2 பேர் பாஜவுக்கு ஆதரவு அளித்ததால் 33 உறுப்பினர்களின் ஆதரவுடன் பாஜ ஆட்சி அமைத்தது. பிரமோத் சாவந்த் முதலமைச்சராக பதவி ஏற்றார். அடுத்த ஆண்டு கோவா பேரவையின் பதவி காலம் நிறைவடைய உள்ளதால் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு தொடர்ந்து 4ம் முறையாக ஆட்சியை தக்க வைத்து கொள்ள நடைபெறவுள்ள தேர்தலில் 30 இடங்களை கைப்பற்ற வேண்டும் என பாஜ இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்த சூழலில் கோவா பேரவை தேர்தலையொட்டி காங்கிரஸ், கோவா ஃபார்வர்ட் கட்சிகளிடையே முதல்கட்ட கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது. தென்கோவாவில் உள்ள ஃபட்டோர்டா நகரில் நேற்று முன்தினம் நடந்த பேச்சுவார்த்தையில் கோவா பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் கிரீஷ் சோடங்கர் மற்றும் கோவா ஃபார்வர்ட் கட்சி தலைவர் விஜய் சர்தேசாய் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த சந்திப்பு குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கிரீஷ் சோடங்கர், “சனிக்கிழமை நடந்த முதல்கட்ட பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து, தொகுதி பங்கீடு உள்ளிட்ட விவரங்களை இறுதி செய்வதற்காக மீண்டும் சந்தித்து பேச உள்ளோம்” என்றார்.
இதனிடையே, ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து முடிவெடுக்க காங்கிரஸ் அமைத்துள்ள குழுவுடன் ஆம் ஆத்மி கட்சியின் கோவா மாநில தலைவர் வால்மீகி நாயக் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வால்மீகி நாயக், “கோவாவில் ஊழல் மிகுந்த பாஜ ஆட்சியை தோற்கடிப்பதே முக்கிய நோக்கம் என்பதால், ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க ஆம் ஆத்மி தயாராக உள்ளது” என்று கூறினார்.
