மும்பை: “பிரதமர் மோடிக்கு இளைஞர்களிடையே செல்வாக்கு அதிகரித்து வருவதால் ராகுல் காந்தி அச்சத்தில் உள்ளார்” என ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் விமர்சித்துள்ளார். பாஜ மூத்த தலைவரும், மும்பை வடக்கு மக்களவை தொகுதி உறுப்பினரும், ஒன்றிய அமைச்சருமான பியூஷ் கோயல் மும்பையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “பிரதமர் மோடி உலகின் மிகவும் பிரபலமான தலைவர். இளைஞர்களுடனான மோடியின் ஈடுபாடும், சமூக ஊடக தளங்களில் அவரது செயல்பாடுகளும் நாட்டின் வளர்ச்சியை விரைவுப்படுத்த உதவுகின்றன.
இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் மோடியின் தொலைநோக்கு பார்வைக்கு இளைஞர்கள் தொடர்ந்து ஆதரவளிக்கின்றனர். பாஜ தொடர்ந்து இளைஞர்களின் ஆதரவை பெற்று வருகிறது. தற்போதைய ஜென் ஸி இளம் தலைமுறையும் எப்போதும் எங்களுடனே இருந்து வருகிறது. ஆனால், முன்பு தன்னை இளைஞர்களின் தலைவராக நினைத்து கொண்டிருந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு தற்போது இளைஞர்களிடையே செல்வாக்கு இல்லை. அதனால் மோடிக்கு இளைஞர்களிடையே செல்வாக்கு அதிகரித்து வருவதை பார்த்து ராகுல் காந்தி அச்சம் அடைந்துள்ளார்” என விமர்சித்தார்.
