மகாராஷ்டிராவில் பயங்கரம் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 10 பேர் பலி

தானே: மகாராஷ்டிராவில் 4 அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் பிவண்டி பாலாஜி நகர் பகுதியில் கோஹினூர் என்ற 4 அடுக்குமாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் மோசமான நிலையில் உள்ளது என கண்டறிந்த பிவண்டி நிஜாம்பூர் மாநகராட்சி, இது குறித்து கடந்த 2020ம் ஆண்டே நோட்டீஸ் அனுப்பியது. கடைசியாக கடந்த ஜூன் 5ம் தேதி குடியிருப்பவர்களை காலி செய்ய நோட்டீஸ் அனுப்பியது.

மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பையும் துண்டித்தது. அதன் பிறகும், வெளியேறாத கட்டிட உரிமையாளர்கள், மாநகராட்சியிடம் எந்த அனுமதியும் பெறாமல் கட்டிடத்தை பழுதுபார்க்கும் பணிகளைத் தொடங்கினர். நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் கட்டிடத்தில் இருந்து திடீரென பலத்த விரிசல் சத்தம் கேட்டுள்ளது. மேலும் கட்டிடம் பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்தது.

தகவலறிந்து விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படை, தானே பேரிடர் மீட்புப் படை மற்றும் உள்ளூர் தீயணைப்புத் துறை குழுக்கள், கூட்டாக இணைந்து மீட்புப் பணியை தொடங்கினர். கட்டிடத்தில் சிக்கியிருந்த சிலரை மீட்டனர். எனினும், இடிபாடுகளில் சிக்கி 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களது சடலம் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடக்கின்றன.

Related Stories: