எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றம் முடங்கியது

புதுடெல்லி: எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அமளியால் நாடாளுமன்றம் சிறிது நேரத்திலேயே நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நேற்று மாநிலங்களவை நடவடிக்கைகள் தொடங்கி அவையில் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டபோது, ​​எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவைப் பேச அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுந்து நின்றனர்.

இதை தொடர்ந்து அவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கார்கேவைப் பேச அனுமதித்தார். இருப்பினும், விதி 267-ன் கீழ் சில பிரச்சினைகளை எழுப்ப கார்கே முயன்றபோது, ​​அந்த விதியின் கீழ் எந்த அறிவிப்புகளும் ஏற்றுக்கொள்ளப்படாது என்று அவர் உத்தரவிட்டார். விதி 267-ன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் அளித்த அறிவிப்பானது, அயோத்தி ராமர் கோயில் நிலம் கையகப்படுத்துதலில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் நிதி கையாடல் தொடர்பானதாக இருந்தது.

இதனால் ஆத்திரம் அடைந்த எதிர்க்கட்சி எம்பிக்கள் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். மேலும் உள்துறை அமைச்சர் அமித் ஷா அவைக்கு வர வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அப்போது பூஜ்ஜிய நேர நடவடிக்கைகளுக்கும் உள்துறை அமைச்சருக்கும் என்ன சம்பந்தம்? என்று அவைத் தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார். அப்போது நிதி நன்கொடை திருடர்களின் ஆட்சி நடக்காது மற்றும் நிதி நன்கொடை திருடர்களே, பதவியை விட்டு விலகுங்கள் உள்ளிட்ட முழக்கங்களை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எழுப்பினர்.

இதனால் அவைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அவையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார். ஆக.3ஆம் தேதி அவை மீண்டும் கூடும் என்று அறிவித்தார். கூச்சலுக்கும் அமளிக்கும் இடையே, அவைத் தலைவர் அவையை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தார். மக்களவை: ஜூலை 20 அன்று நடைபெற்ற நாடாளுமன்றப் பேரணியின்போது மாணவர்கள் மீது காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிராக மக்களவையிலும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த அமளிக்கு மத்தியில் எந்தவித விவாதமும் இன்றி பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்த) மசோதா, 2026 நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. முக்கியமான இந்த மசோதா குறித்து விவாதம் நடைபெற வேண்டும் என்று அரசு விரும்பிய நிலையில், எதிர்க்கட்சிகள் விவாதத்தில் பங்கேற்க மறுத்ததற்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அதிருப்தி தெரிவித்தார். மசோதா நிறைவேற்றப்பட்ட உடனேயே, அவை அன்றைய தினத்திற்கான நடவடிக்கைகளை முடித்துக்கொண்டு ஒத்திவைக்கப்பட்டது.

* பிறப்பு இறப்பு பதிவு மசோதா முக்கியத்துவம்
* பிறப்பு மற்றும் இறப்பு உரிய நேரத்தில் பதிவு செய்வதை ஊக்குவிக்கும் வகையில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டம் 1969 ன் விதிகளைத் திருத்துவதை இந்த மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது.

* இனிமேல் பிறப்பு, இறப்பு நடந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு செய்யப்படும் பதிவுகளுக்கு நீதிபதி ஒருவரின் உத்தரவு கட்டாயம்.

* பிரதமர், முதல்வர்களை பதவி நீக்கும் மசோதா ஆய்வு குழுவின் காலம் நீட்டிப்பு
தீவிரக் குற்றச்சாட்டுகளின் பேரில் 30 நாட்கள் தொடர்ந்து சிறையில் அடைக்கப்படும் பிரதமர் மற்றும் முதல்வர்களை பதவியிலிருந்து நீக்குவதற்கான மசோதாவை ஆய்வு செய்து வரும் நாடாளுமன்றக் கூட்டுக்குழுவிற்கு, தனது அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரின் கடைசி வாரத்தின் முதல் நாளுக்குள் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்க அனுமதிக்கும் தீர்மானத்தை மக்களவை நிறைவேற்றியது. நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் வழக்கமாக நவம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில் தொடங்கி, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னதாக நிறைவடையும்.

* ரஷ்ய ராணுவத்தில் 24 இந்தியர் வேலை
ரஷ்ய ராணுவத்தில் சுமார் 24 இந்தியர்கள் இன்னும் பணியாற்றி வருவதாகவும், அவர்களை விடுவிப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் ஒன்றிய அரசு தெரிவித்தது. ரஷ்ய ராணுவப் பிரிவுகளில் சமையல்காரர்கள் மற்றும் உதவியாளர்கள் போன்ற துணைப் பணியாளர்களாகச் செயல்படும் அனைத்து இந்தியர்களையும் விடுவிக்குமாறு தொடர்ந்து ரஷ்யாவிடம் இந்தியா சார்பில் வலியுறுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

Related Stories: