புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா நிறைவேற்றப்பட்டதை அடுத்து பிரதமர் மோடி சிறப்பு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பொதுத் தேர்வுகள் முறைகேடு தடுப்பு சட்ட திருத்த மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, பிரதமர் மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்றிரவு வீடியோ ஒன்றை வெளியிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியதாவது, ‘நாட்டில் நம்பிக்கையான மற்றும் உலகத்தரம் வாய்ந்த தேர்வு முறையை உருவாக்க நாங்கள் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடும் வினாத்தாள் கசிவு மாஃபியாக்கள் மற்றும் கும்பல்கள் இனி தப்பிக்க முடியாது. வாக்குறுதி அளித்தபடி, இரு அவைகளிலும் பெரும்பான்மை எம்பிக்களின் ஆதரவுடன் இந்த கடுமையான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது.
வளர்ந்த இந்தியாவை உருவாக்க அனைவரும் தோளோடு தோள் கொடுத்து உழைப்போம்’ என்று கூறினார். முன்னதாக, மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, எதிர்க்கட்சிகளின் வெளிநடப்புக்கு இடையே மாநிலங்களவையிலும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. புதிய சட்டத் திருத்தத்தின்படி, வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்கு 5 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 50 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும். மேலும், திட்டமிட்டு நடத்தப்படும் கூட்டமைப்பு குற்றங்களுக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 10 கோடி ரூபாய் வரை அபராதமும் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.
