நீட் வினாத்தாள் கசிவு சர்ச்சையைத் தொடர்ந்து டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் நடத்திய போராட்டம் நாடு முழுவதும் கவனம் பெற்றது. இந்தப் போராட்டத்துக்கு அபிஜித் தீப்கே தலைமை தாங்கினார். ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என அபிஜித் தீப்கே எச்சரித்திருந்தார்.
இதற்கிடையில், அபிஜித் தீப்கே வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் கவலை தெரிவித்தனர். இதையடுத்து, மகாராஷ்டிராவில் அவரது பெற்றோரை சிவசேனா அமைச்சரான ஹிர்ஷக் சந்தித்து, அபிஜித் தீப்கே மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என உறுதியளித்தார். தற்போது அபிஜித் தீப்கே வீடு திரும்பிய நிலையில், அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், அபிஜித் தீப்கே பாஜகவில் சேரவில்லை என்றால் அவரது குடும்பத்தினர் கடுமையான சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிடும் என மிரட்டல் விடுக்கப்பட்டதாக அவரது பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். இதன் காரணமாக, மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள தங்களது வீட்டை விட்டு தற்காலிகமாக வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மராட்டிய ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அபிஜித் தீப்கேயின் தாயார் அனிதா தீப்கே கூறுகையில், “அபிஜித் தீப்கே தனது புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கியதிலிருந்தே அவருக்கு மிரட்டல்கள் வந்தன. ஆனால், அந்த விவரங்களை எங்களிடம் முழுமையாக கூற அவர் விரும்பவில்லை. பின்னர், அவர் பாஜகவில் சேரவில்லை என்றால் எங்களை குறிவைப்போம் என்று காணொளி மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது,” என்றார்.
மேலும், அபிஜித் தீப்கேயின் அறிவுரைப்படி குடும்பத்தினர் அருகிலுள்ள உறவினர் வீட்டில் சுமார் 16 நாட்கள் தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது.
