மதுபோதையில் கார் ஓட்டி சிறுவன் உயிரிழந்த வழக்கு: தொழிலதிபர் ஷாஜி புருஷோத்தமனுக்கு 5 ஆண்டுகள் சிறை!

சென்னை: மதுபோதையில் காரை நடைபாதையில் ஓட்டி, தூங்கிக் கொண்டிருந்த சிறுவன் மீது ஏற்றிய வழக்கில், தொழிலதிபர் ஷாஜி புருஷோத்தமனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

EMPEE குழுமத்தின் தலைவர் எம்.என். புருஷோத்தமனின் மகனும், EMPEE நிறுவனத்தின் இயக்குநருமான ஷாஜி, கடந்த 2013ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி சென்னை எழும்பூர் பாந்தியன் சாலை ஓரத்தில் உள்ள நடைபாதையில் இரவு நேரங்களில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது நள்ளிரவில் மதுபோதையில் தனது சொகுசு காரை ஏற்றியுள்ளார்.

இந்த விபத்தில், 12 வயதான முனிராஜ் இடுப்பு எலும்பு முறிவு மற்றும் வயிறு பகுதியில் ஏற்பட்ட படுகாயங்களினால் சிகிச்சை பலனின்றி மே 24ஆம் தேதி உயிரிழந்தார். மேலும், வாசு, சுப ரஞ்சிதா, ராஜா மொகைதீன், மணி ஆகிய 4 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை நான்காவது கூடுதல் அமர்வு நீதிமன்றம், ஷாஜி குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது.

ஆனால், தீர்ப்பளித்த அன்றைய தினம் ஷாஜி நீதிமன்றத்தில் ஆஜராகாததால், அவருக்கு எதிராகப் பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். இதனை எதிர்த்து ஷாஜி புருஷோத்தமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பிடிவாரண்ட் உத்தரவைத் திரும்பப் பெற்றதுடன், தண்டனை விவரங்கள் குறித்து விசாரணை நீதிமன்றத்தில் கட்டாயம் ஆஜராக வேண்டும் என ஷாஜி புருஷோத்தமனுக்கு உத்தரவிட்டது.

எனினும், தண்டனை விவரங்களை அறிய ஷாஜி நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு எதிராக மீண்டும் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை நான்காவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஷாஜி சரணடைந்தார். அப்போது, குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஷாஜிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10,500 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதனைத் தொடர்ந்து, ஷாஜி புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Related Stories: