சென்னை: மேகதாது அணை விவகாரத்தில் பாஜகவும் காங்கிரஸும் கூட்டுச் சதியில் ஈடுபட்டிருப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் அன்புமணி பேசியதாவது, மேகதாது அணையை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை; அங்கீகரிக்கவில்லை. இவ்வாறு அங்கீகரிக்கப்படாத ஒன்றில் பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்த அர்த்தமும் கிடையாது. ஒன்றிய அரசிடமும் பிரதமர் மோடியிடமும்தான் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்.மேகதாது அணையைக் கட்ட விடக் கூடாது என ஒன்றிய அரசுக்குத்தான் அழுத்தம் தர வேண்டும்.
கர்நாடக அணையில் இன்றைக்கு 62 டிஎம்சி தண்ணீர் இருக்கிறது. ஆனால், தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்து விடுமாறு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு, கடந்த மாதத்தில் இரு முறை அறிவுறுத்தியபோதிலும், அவர்களிடம் நீர் இல்லை என்று கூறினர். மேகதாது அணை கட்டுவதற்கு முன்பாகவே, கர்நாடகத்தில் தண்ணீர் இருந்தும் தமிழகத்துக்குத் தர மறுக்கும்நிலையில், அணை கட்டியபிறகு குடிப்பதற்குக்கூட தண்ணீர் கிடைக்காது.
ஆகையால், தமிழக முதல்வர் விஜய் கர்நாடகத்துக்கு செல்லக் கூடாது. அதற்கு முன்னதாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுங்கள். இது தவெகவின் தனிப்பட்ட பிரச்னை கிடையாது. இது தமிழ்நாட்டின் பிரச்சனை. இதனை வேறு விதமாக கர்நாடகம் கொண்டு செல்கிறது. அதில் முதல்வர் விழுந்து விடக் கூடாது. இந்த விவகாரத்தில் ஒன்றிய பாஜக அரசும், கர்நாடக காங்கிரஸ் அரசும் கூட்டுச் சதி செய்து வருகின்றனர்.
இதில் தமிழ்நாடு விழுந்து விடக் கூடாது என்பதுதான் ஒட்டுமொத்த விவசாயிகளின் கோரிக்கை. கடந்த காலங்களில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதெல்லாம் காவிரி நீருக்காகத்தான்; மேகதாது அணைக்காக அல்ல. மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்க பிரதமர் மோடியிடம் எங்களை அழைத்துச் செல்லுங்கள். அவரிடம் வலியுறுத்த நாங்கள் தயாராக உள்ளோம். அதேபோல, மேகதாது அணை கட்டக் கூடாது என ராகுல் காந்தியிடம் சொல்ல மாணிக்கம் தாகூருக்கு தைரியம் இருக்கிறதா? ராகுல் காந்தி கர்நாடக அரசு மேகதாது அணை கட்டக்கூடாது என்று, ஒரே ஒரு வரி கூறிவிட்டால், நாங்கள் என்.டி.ஏ.வில் இருந்து விலகுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
