சென்னையில் இரவில் மழை; 15 விமான சேவைகள் பாதிப்பு: பயணிகள் கடும் அவதி

 

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு பெய்த திடீர் மழை, இடி மின்னல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 15 விமான சேவைகள் பாதிக்கப்பட்டு பயணிகள் கடும் அவதி அடைந்தனர். விமானங்கள் தரையிறங்க முடியாமல், நீண்ட நேரம் வானில் வட்டமடித்து தத்தளித்தன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு 8 மணி அளவில், திடீரென இடி மின்னல் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதை அடுத்து அந்த நேரத்தில் சென்னை விமான நிலையத்தில், விமான சேவைகள் பெருமளவு பாதிக்கப்பட்டன.

அபுதாபியில் இருந்து 209 பயணிகளுடன், சென்னையில் தரையிறங்க வந்த எத்தியாட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், டெல்லியில் இருந்து 165 பயணிகளுடன் சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், கவுஹாத்தியிலிருந்து 174 பயணிகளுடன் சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், கோவையிலிருந்து 138 பயணிகளுடன் சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், திருச்சியில் இருந்து 70 பயணிகளுடன் சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

இதேபோல் கோவா, பெங்களூர், புவனேஸ்வர், மும்பை ஆகிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், கவுகாத்தியிலிருந்து 187 பயணிகளுடன் சென்னை வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், ஆகிய விமானங்கள், சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் சுற்றி வட்டமடித்துக் கொண்டு இருந்தன. சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், நிலைமையை உன்னிப்பாக கவனித்து, மழையின் வேகம் மேலும் அதிகரித்தால், விமானங்களை பெங்களூர், திருச்சி, திருப்பதி போன்ற விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்புவதற்கு தயாரானார்கள். ஆனால் இரவு 9.30 மணிக்கு மேல், மழையின் வேகம் குறைந்ததை அடுத்து, வானில் வட்டமடித்த 10 விமானங்களும் ஒன்றன்பின் ஒன்றாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கின.

அதைப்போல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்கள், அபுதாபி செல்லும் எத்தியாட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மும்பை செல்லும் இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா விமானங்கள், டெல்லி, பெங்களூர், செல்லும் விமானங்கள், ஆகிய ஐந்துக்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.

Related Stories: