பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தை சுற்றி செடி-கொடிகள் முளைத்து புதர்மண்டி காணப்படுவதால், பாம்புகள் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். ஆர்.கே.பேட்டையில் வட்டார வளர்ச்சி அலுவலகம் பின்புறத்தில் வட்டாட்சியர் அலுவலகம் செயல்படுகிறது. வட்டாட்சியர் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தினமும் 300க்கும் மேற்பட்டோர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் சான்றுகள், நலத்திட்ட உதவிகள், பட்டா, நில அளவீடு பணிகளுக்காக அலுவலர்களை சந்திக்க வருகின்றனர்.
இந்நிலையில், வட்டாட்சியர் அலுவலக முகப்பு பகுதியில் சாலைக்கு இருபுறமும் அடர்த்தியாக செடி-கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. இதனால், பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால், வருவாய்த்துறையினர் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே, வட்டாட்சியர் அலுவலக வளாகத்தை சுற்றி வளர்ந்துள்ள செடி-கொடிகளை அகற்றி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பறிமுதல் வாகனங்களை சூழ்ந்துள்ள முட்புதர்கள்
ஆர்.கே.பேட்டை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு வழக்குகளில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் வட்டாட்சியர் அலுவலக முகப்பு பகுதியில் உரிய பராமரிப்பின்றி பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளது. மழை மற்றும் வெயிலுக்கு பறிமுதல் வாகனங்கள் வீணாவதோடு, வாகனங்களின் முக்கிய பாகங்கள் காணாமல் போனது. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை முட்புதர்கள் முழுமையாக சூழ்ந்து வாகனங்கள் இருக்கும் இடம் தெரியாத அளவில் பயனற்று வீணாகி வருகிறது.
